சொந்த வாழ்க்கை பயணத்தை எதிரொலிக்கும் முஃபாசா.. ஷாருக்கான் நெகிழ்ச்சி
தனக்கு உரிய தலைமையிடத்தை அடைவதற்காக முஃபாசா மேற்கொள்ளும் சவால்கள் தன் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிப்பதாக உள்ளதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘தி லயன் கிங்’ இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ‘தி லையன் கிங்’-ன் ப்ரீக்வல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் குவித்தது. இந்த வரிசையில் அடுத்ததாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு அந்ததந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இந்தி பதிப்பில் முஃபாசாவுக்கு முன்னணி நடிகர் ஷாருக்கான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
முஃபாசாவிற்கு பின்னணி குரல் கொடுத்தது நெகிழ்ச்சியாக இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட வீடியோவில், முன்னணி நடிகராக மாறுவதற்கான தனது சொந்த பயணத்தை முஃபாசாவின் பயணம் எதிரொலிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கே உரிய தலைமையிடத்தை அடைவதற்காக பல சவால்களை முஃபாசா வெற்றிகரமாக எதிர்கொண்டு உயர்ந்தது போலவே ஷாருக்கானின் கடின உழைப்பும், உறுதிப்பாடும் அவரை இந்திய சினிமாவின் உண்மையான பாட்ஷாவாக உயர்த்தியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அர்ஜுன் தாஸ் முஃபாசா கதாபாத்திரத்துக்கும், அசோக் செல்வன் டாக்கா கதாபாத்திரத்துக்கும் குரல் கொடுத்துள்ளனர். ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி ஆகியோர் பும்பா மற்றும் டிமோனா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். கிரோஸ் கதாபாத்திரத்துக்கு நாசர், ரஃபிக்கி கதாபாத்திரத்துக்கு விடிவி கணேஷ் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?