சென்னை: அடுத்தாண்டு பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகிறது. அஜித் மட்டும் சிங்கிளாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குட் பேட் அக்லிக்கு போட்டியாக கேம் சேஞ்சர் படமும் ரிலீஸாகிறது. ஷங்கர் இயக்கத்தில் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டோலிவுட் ராக் ஸ்டார் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். அதேபோல், கோலிவுட் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியும் முதன் முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதனால் கேம் சேஞ்சர் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கேம் சேஞ்சரில் ராம் சரண் கலெக்டராக நடித்துள்ளதாகவும், இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம், எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. கமல்ஹாசன், ஷங்கர், அனிருத் என பிரம்மாண்ட கூட்டணியில் இந்தப் படம் ரிலீஸானது. திரையரங்குகளில் வெளியான இந்தியன் 2, நெகட்டிவான விமர்சனங்களால் நெட்டிசன்களால் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டன. இதனால் இந்தியன் 3 படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக வாய்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த ஷங்கருக்கே இந்த நிலையா என சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கேம் சேஞ்சர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ராம் சரணும் கேம் சேஞ்சர் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார். ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம், பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வருகிறார் ராம் சரண். அதுமட்டுமில்லாமல் ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் சேர்ந்து டான்ஸ் ஆடிய நாட்டு நாட்டு பாடல், ஆஸ்கர் விருதும் வென்று அசத்தியது. இதனால் ஆர்.ஆர்.ஆர் வரிசையில் கேம் சேஞ்சர் படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.