Actor Mohanlal : 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்புவது ஏன்?'.. மோகன்லால் பரபரப்பு பேட்டி!
Actor Mohanlal Comment on Malayala Film Industry : ''மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அம்மா சங்கத்தை (நடிகர் சங்கம்) மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். அம்மா சங்கம் மட்டுமே எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்?'' என்று மோகன்லால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Actor Mohanlal Comment on Malayala Film Industry : கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ், மலையாள முன்னணி நடிகை ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்பட அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
அதாவது இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன், நடிகர்கள் ஜெயசூர்யா, ரியாஸ் கான், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். பெண்கள் மட்டுமின்றி ஆண் ஒருவரும் இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
தொடர் பாலியல் புகார்களால் மலையாள திரையுலகமே தள்ளாடி வருகிறது. இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உட்பட 17 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த மோகன்லால் இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகை பார்வதி, ''பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அதற்கு முறையான பதில் அளிக்காமல், விளக்கம் தெரிவிக்காமல் மோகன் லால் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தது கோழைத்தனமான ஒரு முடிவாகும். தவறு செய்தவர்கள் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு சென்றது ஏன்? இது குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?'' என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக பேசியுள்ள நடிகர் மோகன்லால், நடிகர் சங்கம் தொடர்பாக அவதூறு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், ''பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்களது கடமையை செய்து வருகின்றன. மலையாள திரையுலகின் கடைநிலை ஊழியர்கள் கூட பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட கூடாது என்பதே எங்களது விருப்பமாகும்.
நான் எங்கும் ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன். பாலியல் புகார்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி நடத்தி வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அம்மா சங்கத்தை (நடிகர் சங்கம்) மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். அம்மா சங்கம் மட்டுமே எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்? சிலர் அம்மா சங்கம் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் பதில் சொல்லும். ஆகவே அம்மா சங்கம் மீது அவதூறு பரப்பக் கூடாது. மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு பேரிடர் உள்ளிட்ட பல்வேறு கடினமான நேரங்களில் மக்களுக்கு அம்மா சங்கம் உதவி செய்துள்ளது. ஆகவே அவதூறு பரப்புவதை பத்திரிகையாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






