’மெய்யழகன்’ படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் அதற்கு விளக்கமளித்தும் இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆக்ஷன் ஜானர் படங்களில் நடித்து வந்த கார்த்தி, மெய்யழகன் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார். கார்த்தி கரியரில் மெய்யழகன் முக்கியமான படமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 96 பட பிரபலம் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன், ஃபீல்குட் மூவியாக உருவாகியுள்ளது. மெலோ ட்ராமா ஸ்டைலில் எமோஷனலான படம் எனவும் மெய்யழகனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
மெய்யழகன் கதை படி, சொத்துப் பிரச்சினையால் அரவிந்த் சாமியின் குடும்பம் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிறது. இதனால் பல வருடங்களாக சொந்த ஊரையும் உறவுகளையும் பிரிந்து வாழும் அரவிந்த் சாமி, தனது தங்கை ஒருவரின் திருமணத்திற்காக மீண்டும் சொந்த ஊர் செல்கிறார். அங்கே அரவிந்த் சாமியை விழுந்து விழுந்து கவனிக்கிறார் கார்த்தி. இந்த அன்புத் தொல்லை ஒருபக்கம் இருக்க, கார்த்தி யாரென்றும் தெரியாமல், அவரது பெயரையும் கேட்க முடியாமல் அரவிந்த் சாமி தடுமாறுவதும், இறுதியில் என்ன ஆனது என்பதும் தான் மெய்யழகன் கதை.
கார்த்தி – அரவிந்த் சாமி இடையேயான உரையாடல்களும், எமோஷனலான காட்சிகளும் ரசிகர்களுக்கு ஒரு நாவல் படித்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதேநேரம் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காட்சிகள் எல்லாம் கொஞ்சம் போர் ரகம் எனவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மொத்த படத்திலும் கார்த்தியும் அரவிந்த் சாமியும் மட்டுமே வருகின்றனர். அவர்களின் உரையாடலும் சில இடங்களில் நாடகம் பார்ப்பது போல இருப்பதாக நெகட்டிவாக விமர்சனம் செய்துள்ளனர்.
மெய்யழகனுக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனாலும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சுமாராகவே உள்ளது. அதன்படி, முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது மெய்யழகன். இரண்டாவது நாளில் இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் மெய்யழகன் திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் அதற்கு விளக்கமளித்தும் இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.”
மேலும் படிக்க: மீண்டும் ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு..என்ன சொன்னார் தெரியுமா?
“எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை. சூர்யா அண்ணா, கார்த்தி BROTHER, ராஜசேகர் SIR(2D), சக்தி அண்ணா (SAKTHI FILM FACTORY) என அனைவரும், முதல் சந்திப்பு முதல் இன்று வரை என்னை அரவணைத்து, முழு படைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள். இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு என் பேரன்பும் நன்றியும். எப்போதும் பேராதரவு அளிக்கும் ஊடக மற்றும் பத்திரிக்கை அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.