ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக முதியவர் மீது தாக்குதல்.. நெட்டிசன்கள் கண்டனம்!

''நாம் அனைவரும் இந்தியர்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்று தாக்குதல்களில் ஈடுபடும் நபர்களின் மனதில் விளைய வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையும்'' என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Aug 31, 2024 - 16:33
Sep 1, 2024 - 10:08
 0
ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக முதியவர் மீது தாக்குதல்.. நெட்டிசன்கள் கண்டனம்!
Old Man Attacked In Maharashtra

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹாஜி அஷ்ரப் முன்யார். முதியவரான இவர் கல்யாணில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். நாசிக் மாவட்டம் லகாட்பூர் என்ற இடத்தின் அருகே ரயில் சென்றபோது, அதே ரயிலில் பயணம் செய்த சிலர் ஹாஜி அஷ்ரப் முன்யாரை தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

அதாவது ஹாஜி அஷ்ரப் முன்யார் மாட்டு இறைச்சி எடுத்துச் செல்வதாக சந்தேகம் அடைந்த பயணிகள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் முதியவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே போலீஸ் அதிகாரிகள், ''ரயிலில் பயணிகளால் தாக்குதலுக்கு உள்ளான முதியவரை அடையாளம் கண்டுள்ளோம். இதேபோல் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலரையும் அடையாளம் கண்டுள்ளோம். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது'' என்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள், ''ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது மிகவும் அவமானகரமானது. அந்த முதியவர் மாட்டிறைச்சி வைத்திருந்தால் என்ன தவறு? நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு பிடித்தமான உணவை சாப்பிட முழு உரிமை உண்டு. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும், அவர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ''இத்தகைய நபர்கள் மீது ஒருபக்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுத்தாலும், 'நாம் அனைவரும் இந்தியர்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும்' என்ற எண்ணம் இதுபோன்று தாக்குதல்களில் ஈடுபடும் நபர்களின் மனதில் விளைய வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow