Kamal Haasan 70: கோலிவுட் கண்டெடுத்த கலைஞானி... உலகநாயகன் ஹைலைட்ஸ் சம்பவங்கள்!
இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்... ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் இன்று. களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை, திரையுலகில் கமல்ஹாசன் செய்துள்ள சாதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல... அதன் ஹைலைட்ஸை இப்போது பார்க்கலாம்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் 6 வயது குழந்தை நட்சத்திரமாக முகம் காட்டிய கமல்ஹாசன், இதோ அவரது 65 ஆண்டுகால திரைப் பயணத்தில், சினிமாவின் எல்லாவிதமான முகமாகவும் ஜொலித்துவிட்டார். இதோ இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் கமல், வேட்கைத் தீராத வேங்கை புலியாக, இன்னும் பல புதிய இலக்குகளைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு என்றிருந்த சில இலக்கண வரையறைகளை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பயணித்து உடைத்தெறிந்தவர்களில் கமலுக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. நடிகனாக, திரைக்கதை எழுத்தாளனாக, இயக்குநராக, தயாரிப்பாளராக, சினிமாவில் கமல் பயணித்த தடங்கள் எண்ணிலடங்கா.
எந்த கேரக்டர்களுக்கும் வசனங்களே இல்லாமல் வெளியான புஷ்பக விமானம் என்ற பேசும் படம், இப்போது வரையும் திரையுலகில் பேசுபொருளாக உள்ளது. 4 கேரக்டர், அந்த நான்கிலும் தனித்துவமான மிரட்டல் நடிப்பு என ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் மூவியான மைக்கேல் மதன காமராஜன். தமிழில் ஒரு காட்ஃபாதர் மூவி என ரசிகர்கள் கொண்டாடிய நாயகன். குள்ள அப்புவின் ரகசியம் என்னவென்று தெரியாமல் இன்றும் புதிராக உள்ள அபூர்வ சகோதரர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விடும் வகையில் பக்கா கமர்சியல் ஹிட்டாக வெளியான சகலகலா வல்லவன். தமிழில் இப்படியும் படங்களா என நினைத்தே பார்க்க முடியாத, 16 வயதினிலே, மகாநதி, குணா, தேவர் மகன், குருதிப் புனல், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசவதாரம் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் கமல்ஹாசன் என்ற கலைஞானி இல்லாமல் தமிழில் சாத்தியமாகிருக்குமா என்பது சந்தேகமே. படத்திற்குப் படம் நடிப்பிலும் கெட்டப்பிலும் வித்தியாசம் காட்டலாம். ஆனால் ஒரே படத்தில், ஒரே காட்சியில், ஒரே ப்ரேமில், நொடிப்பொழுதில் தனது நடிப்பால் மாய வித்தைகளை அரங்கேற்றியவன் இந்த உலக நாயகன். கலை படைப்பு, புதிய முயற்சிகள், வணிக சினிமா என, திரையுலகின் மெயின் ரோடு முதல் சந்து பொந்துகள் வரையிலும், கமல் போட்டு வைத்த ஒத்தையடி பாதைகள், இன்றைய தலைமுறைகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போல பரந்து விரிந்து கிடக்கின்றன.
ஹீரோ - வில்லன், காமெடி ரோல் - ஆக்ஷன் அவதாரம், அவ்வை சண்முகி பாட்டி – இந்தியன் தாத்தா, டான்ஸ் மாஸ்டர் – சிங்கர், இப்படி எந்த அவதாரம் என்றாலும் கூடு விட்டு கூடு பாய்வதில் கமல்ஹாசனை போல ஒரு ஜித்து ஜில்லாடியை திரையுலகம் இதற்கு முன் கண்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், சினிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். சில ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் ஃபீல்ட் அவுட் என அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, விக்ரம் திரைப்படம் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து பதிலடி கொடுத்தார்.
மேலும், கல்கி, இந்தியன் 2 என அடுத்தடுத்து மாஸ் காட்டிய கமல்ஹாசன், விரைவில் தக் லைஃப் திரைப்படம் தெறிக்கவிட காத்திருக்கிறார். 6 வயதில் தனது திரை பயணத்தை தொடங்கிய போது இருந்த கமலின் வேகம், இப்போது 70 வயதிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்பது அவ்வளவு எளிதானது கிடையாது. கலையின் மீது தீரா தாகம் கொண்ட ஒருவனால் மட்டுமே அது சாத்தியமாகும், அதற்கு கமல்ஹாசன் என்றொரு மகா கலைஞனே சான்றாகும்.
What's Your Reaction?