Dhanush: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கில் சிக்கல்... இந்த கதைக்கு ஒரு முடிவே கிடையாதா..?
நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா இருவரது விவாகரத்து வழக்கு விசாரணையை குடும்ப நல நீதிமன்றம் ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரே இயக்கி நடித்து வெளியான ராயன், 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதன் தொடர்ச்சியாக குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை இயக்கியும் வருகிறார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே தனுஷின் விவாகரத்து வழக்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அதன்படி இவர்களது திருமணம் 2004ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் தனுஷின் கரியர் உச்சம் சென்றதற்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தார் ஐஸ்வர்யா. அதேபோல் தனுஷ் நடித்த 3 என்ற படத்தையும் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே சென்றுகொண்டிருந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே தான் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமண வாழ்க்கையில் இருந்து விலக தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு பரஸ்பர புரிதலுடன் விவாகரத்து செய்யவுள்ளதாக தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக சொல்லப்பட்டாலும், இதற்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.
அதேநேரம் தங்களது மகன்களுக்காக அவர்களது பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பங்கேற்று வந்தனர். இந்நிலையில், விவகாரத்து கோரிய வழக்கில், தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவருமே ஆஜராகவில்லை என்பதால், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?






