Kamal Hassan: “இதற்காக தான் அரசியலுக்கு வந்தேன்... 2026 தேர்தல் தான் இலக்கு..” மனம் திறந்த கமல்ஹாசன்!

Kamal Hassan Speech at Makkal Needhi Maiam General Meeting : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் முன் உரையாற்றினார் கமல்ஹாசன்.

Sep 21, 2024 - 15:11
Sep 21, 2024 - 15:54
 0
Kamal Hassan: “இதற்காக தான் அரசியலுக்கு வந்தேன்... 2026 தேர்தல் தான் இலக்கு..” மனம் திறந்த கமல்ஹாசன்!
Kamal Hassan Speech at Makkal Needhi Maiam General Meeting

Kamal Hassan Speech at Makkal Needhi Maiam General Meeting : இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அவர், வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் 2வது பொதுக்குழுக் கூட்டத்தில், தனது அரசியல் பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். நான் இங்கே அமர வரவில்லை, எனக்கு எந்த சீட் கொடுக்கப்பட்டாலும் அதில் அமர்ந்துவிட்டேன் என்றால் நான் வேலை செய்யவில்லை என்று அர்த்தம், நாம் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என தனது ஸ்டைலில் உரையை தொடங்கினார்.  

தொடர்ந்து பேசிய அவர், காந்தியை நாம் இறக்கை வைத்த ஒரு தேவதையாக பார்க்க வேண்டும், காந்தி போன்ற யார் வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்கான வீரம் மற்றவரிடம் உள்ளதா என நான் என்னைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேன். நேர்மைக்கான சோதனைகள் நிறைய என்னிடம் வந்துள்ளது, நீங்கள் எல்லாம் என் அரசியலுக்கு வந்தீர்கள்? அதற்கு ஒரு மாதிரியான மூலை வேண்டும் எனக் கூறினார்கள். நான் என்ன வேட்டைக்கா செல்கிறேன் என பதில் சொன்னேன். அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார்கள், மக்களை நான் நேரடியாக எனது நான்கு வயது முதல் பார்த்துக் கொண்டு வருகிறேன். அரசியலுக்காக எந்த மேடையையும் பயன்படுத்திக்கொள்ளலாம், அதில் தவறு இல்லை என்றார்.  

மேலும், நான் தோற்ற அரசியல்வாதி தான், தோற்பது என்பது நிரந்தரம் அல்ல, அதேபோன்று பிரதமர் பதவியும் நிரந்தரம் அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தான பேச்சு, அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும், அது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை நாம் உணர வேண்டும். அதனால் இந்தியாவிற்கு அது தேவைப்படாது என்பது என்னுடைய கருத்து. 15 வருடங்களுக்கு முன்னால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அறிவித்திருந்தால் இந்நேரம் இந்தியா என்னவாக இருக்கும். கோவிட் என்ற சொல்ல கூடிய ஒரு கொடிய நோயிலிருந்து தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இந்தியாவிலேயே நேர்மையானவர்கள் என்றால் அது தமிழ்நாடு தான், ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னவுடன் கேள்வி கேட்டது தமிழ்நாடு தான். ஆனால் இன்று உங்களுக்கு எதற்கு அத்தனை பாராளுமன்ற தொகுதிகள் என கேட்கின்றனர். இன்று நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நம்முடைய பணம், அதைப் பகிர்ந்துகொடுக்க வேண்டும், அங்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, அங்கு கர்ணனாகவும், இங்கு கும்பகர்ணாகவும் இருக்கிறார்கள். அங்கு ராக்கெட் விட்ட நம்ம, இங்கு ஒரு தும்பை கூட விட முடியவில்லை. 

நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல, நமக்காக கூட அல்ல. நாளைய தலைமுறைக்காக. இன்றைய தினத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் விடியாது, நாளை என்றால் அது பழுக்கும். படத்தில் கூட ஒரு வசனம் வைத்தேன். விதை நான் போட்டது பழம் அவன் சாப்பிட்டு போவான். ஆனால் விதை நான் போட்டது, ஒரு தாடிகாரருக்கு அரசியலில் அவ்வளவு வெற்றி இல்லை, ஆனால் சித்தாந்தத்தில் வெற்றி இருந்தது. அதேபோல் தான் கோயம்புத்தூரில் நடந்தது தோல்வி என்றால், அவர்கள் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது வெற்றி அல்ல. என்ன இப்படி சுளிரென சொல்லிவிட்டேன் என நினைக்காதீர்கள், குற்றமுள்ள நெஞ்சுக்கு தான் குறுகுறுக்கும் என்றார். 

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், உங்கள் தலைவர் எவ்வளவு பெரிய ஆள் என்று கூட்டம் போட்டு சொல்லாதீர்கள். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரியது என்று காட்டுங்கள். அதன்பிறகு என்னை பெரிய ஆள் என்று கூறுங்கள், அப்போது நான் நம்ப ஆரம்பிப்பேன். நாம் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு வீதிகளிலும் மக்கள் நீதி மையம் தொண்டர்கள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அவங்க கேட்பாங்க, மக்கள் நீதி மைய கட்சிகாரர்கள் என்ற நிலை மாற வேண்டும், இறங்கி வேலைசெய்ய வேண்டும். இதைத்தான் உங்களிடம் நான் கேட்கிறேன், நான் இறங்கி வேலை செய்யவில்லை என்றால் இந்த மேடைக்கு நான் வந்திருக்க மாட்டேன், எந்த மேடைக்கும் சென்றிருக்க முடியாது.  

நான் அண்ணன், அப்பா என்ற முறையில் விமர்சனங்களை மட்டுமே கூறிக் கொண்டிருப்பேன். என்னிடம் ஒண்ணுமே இல்லாதபோது கூட என் பின்னால் வந்தவர்கள் இருக்கிறார்கள். இன்று உங்களுக்கு புரியாது, ஒரு 15 வருடம் கழித்துப் பாருங்கள், உங்களுக்கு வைக்கின்ற வணக்கம் வேறுமாதிரி இருக்கும். நாளைய அரசியல் நம்மை பார்த்து பேசப் போகிறது. அதற்கு முன்னதாக இன்றைய அரசியல்வாதிகள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கூறுகிறேன். உங்கள் தொண்டர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். உங்கள் தொண்டர்களை பிள்ளைகள் போல நல்லா வளர்த்திருப்பதாகவும் அவர் கூறினார். அப்போது எனக்கு ஆனந்த கண்ணீர் தான் பரிசாக கிடைத்தது. 

எனவே எதை தேற்ற வேண்டுமோ, அதை தேடுங்கள். நீங்கள் எதை எடுக்கிறீர்களோ அது உங்களுக்குச் சொந்தமானது அல்ல. மக்கள் எதை கொடுக்கிறார்களோ அதுதான் நமக்கு சொந்தமானது. நாம் 2026 தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை எனது அன்பு கட்டளையாக எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு வித்தியாசமான விவசாயம், இதில் ஒரு பொறுமை வேண்டும், தினம்தோறும் அதனைத் தோண்டிப் பார்க்கக் கூடாது. என்ன திரும்பவும் சினிமா போய்விட்டார் என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். கோட்டைக்கு சென்று கஜானா திறக்கவா என நானும் பதில்லுக்கு கேட்டேன். ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு பணம் தேவைப்படுகிறது, அதனால் தான் சினிமாவுக்கு செல்கிறேன்.  

நீங்கள் மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிட்டீர்கள். முழுநேர அரசியல்வாதியாக மாறுங்கள் என்று சொல்கிறார்கள். பல அரசியல்வாதிகள் சீட்டாட்டம் ஆடியதை நான் பார்த்திருக்கிறேன், முழு நேர அரசியல்வாதி யாரும் இல்லை என பெரியார் கூறியுள்ளார். எனவே முழுநேர அரசியல்வாதி என்று யாரும் சொல்லிக்கொள்ள வேண்டாம், முழுநேர அரசியல்வாதியாக மாறி உங்கள் குடும்பங்களை தெருவில் விட்டு விட்டு வர வேண்டாம் என நான் கூறவில்லை. நான் காந்தியடிகளின் தோழன், தொண்டன், மாணவன், ஏன் விமர்சகணும் கூட. இந்த அரசியல் உலகம் எப்படியெல்லாம் நம்மை ஈர்கும் என எனக்குத் தெரியும். நாம் உணவுக்காக கூடிய காக்கை கூட்டமாக இருக்கக் கூடாது.  

எனக்கு மிகப்பெரிய இடைஞ்சல்கள் கொடுத்தவர்களை எல்லாம் பார்த்து நான் வளர்ந்துள்ளேன். நம்மை நாட்டைவிட்டு துரத்தி விடுவார்களோ என நினைத்தவர்களை பார்த்தும் நான் வளர்ந்துள்ளேன், அவர்களுடன் நன்றாக பழகியும் உள்ளேன். நாளை நமதாக வேண்டும், அதனை கட்டுவித்த சிற்பியாக நாம் மாற வேண்டும், அதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும், அதனை செய்யுங்கள் நாளை நமதே ஆகும் என்றார். மேலும், மக்களைப் பார்த்து பேசக்கூடிய எந்த ஒரு ஊடகமாக இருந்தாலும் மேடையாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. இதை நான் நான்கு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் என் வாழ்வு முறை, இதுதான் வாழ்க்கை எனக்கு சொல்லும் செய்தி. அதனால் தான் நான் அரசியலை தேர்ந்தெடுத்தேன் என்றார்.  

அதேபோல், பட்டினிப் போடுங்கள் என்று சொல்லவில்லை, பகிர்ந்துண்ணுங்கள் என்று தான் சொல்லுகிறோம். அண்ணா என்றோ சொன்னார், தெற்கு பெய்கிறது வடக்கு வாழ்கிறது என்று. இன்றும் அதுதான் நடக்கிறது. இந்தியாவில் கற்பனையே பண்ணி பார்க்காத ஒரு நிலையை உருவாக்கி மொழிவாரியாக ஜாதி பேசி பேசி பிரித்துவிட்டோம். ராஜகோபாலன் ஆச்சாரி, இதில் ஆச்சாரியை தூக்கிவிடலாம், ராஜகோபாலன் போதும். ராஜகோபாலன் என்ற ஒருவர் பெங்காலில் முதலமைச்சராக இருந்துள்ளார். இங்கேயும் முதலமைச்சராக இருந்தார். அவர் ஒரு தெலுங்குகாரர், அவர் இங்கு வந்து இருந்திருக்கிறார், அது இங்கு நடக்கும். ஆனால், ஒரு தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு இந்த நாட்டை தயார்படுத்த வேண்டும். தமிழன் ஏன் வர அந்த தலைமை பொறுப்புக்கு வர முடியவில்லை என்று பேசினால் சிலருக்கு கோபம் வந்துவிட்டது. அந்தக் கோபத்தை எல்லாம் பார்த்தால் உண்மையை பேச முடியாது என கமல்ஹாசன் பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow