புண்ணியம் தரும் புரட்டாசி சனி.. பெருமாளுக்கு விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள்

புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். சனிபகவானல் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

Sep 21, 2024 - 07:49
 0
புண்ணியம் தரும் புரட்டாசி சனி.. பெருமாளுக்கு  விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள்
purattasi sani viratham 2024

புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில் எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். புரட்டாசி திருவோணத்தில்தான் ஸ்ரீனிவாசப்பெருமாள் அவதரித்தார் என்பதால் புரட்டாசி மாதம் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலைவாசன் ஏழுமலையானுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். 

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். செப்டம்பர் 21,28, அக்டோபர் 5,12, ஆகிய நான்கு சனிக்கிழமைகளில்  பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

புரட்டாசியில்  வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். 

புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. 

துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்ற  வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்குவதோடு வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும் நம்பிக்கை ஐதீகம்.

புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும். புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow