நெருப்புத்தலமான திருவண்ணாமலையில் பற்றி எரிந்த தீ.. பதறிய பக்தர்கள்

பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் தீபம் மலையின் மீது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.3 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீயினால் 5 ஏக்கர் பரப்பளவில் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமானது.

Sep 20, 2024 - 18:17
 0
நெருப்புத்தலமான திருவண்ணாமலையில் பற்றி எரிந்த தீ.. பதறிய பக்தர்கள்
tiruvannamalai hills fire

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது. மலையே சிவமாக வணங்கப்படுவதால் பக்தர்கள் கிரிவலம் வந்து வணங்குவார்கள். பசுமையான மலையில் பல மணி நேரம் நெருப்பு பற்றி எரிவதால் மூலிகை மரங்கள் எரிந்து  
சாம்பலாகியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது 2,668 அடி உயரம் கொண்ட தீப மலை.இந்த தீப மலையின் மீது பல்வேறு அறிய வகைகளைக் கொண்ட மரங்கள், மூலிகைச் செடிகள் அமைந்துள்ளன. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலத்தை மக்கள் மேற்கொள்ளும் பொழுது மூலிகை காற்றை சுவாசித்தபடி கிரிவலம் வருவர்.

இந்நிலையில் இன்று மர்மநபர்களால் மலைமீது உள்ள மூலிகை செடிகளுக்கும், மரங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து  தீயானது மளமளவென பரவி மலை முழுக்க தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் மூலிகைச் செடிகள் எரிந்ததுடன், கரும்புகையுடன் காட்சியளித்தது.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மலை மீது எரிந்து கொண்டிருக்கும் தீயினை வனத்துறையினரும், மலை பாதுகாப்பு குழுவினரும் இளைஞர்களும் போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருநாளில் மலை மீது எரியும் தீபத்தை பலரும் தரிசனம் செய்து வணங்குவார்கள். இந்த நிலையில் மலையில் பற்றி எரியும் நெருப்பு பக்தர்களை பதற வைத்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow