பழனி பஞ்சாமிர்தத்தில் மிருகக் கொழுப்பா?.. இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த விளக்கம்

தமிழக அரசின் உண்மையை கண்டறியும் குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில், பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Sep 20, 2024 - 17:37
Sep 20, 2024 - 17:51
 0
பழனி பஞ்சாமிர்தத்தில் மிருகக் கொழுப்பா?..  இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த விளக்கம்
palani panchamirtham ghee animal fat

திருப்பதி லட்டு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பழனி பஞ்சாமிர்தத்திலும் கலப்படம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து தமிழக அரசின் உண்மையை கண்டறியும் குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

முருகப்பெருமானின் மூன்றாம்  படை வீடான பழனியில் அருள்பாலிக்கும் தண்டயுதபாணியை போகர் சித்தர் நவபாஷானத்தால் உருவாக்கியுள்ளார். பழனி  என்றாலே முருகப்பெருமானுக்கு அடுத்தபடியாக பஞ்சாமிர்தமும்தான் நினைவுக்கு வரும். பழனிக்குப் போகிறவர்கள் குறைந்தது ஒரு டப்பா பஞ்சாமிர்தத்தை யாவது வாங்காமல் வரமாட்டார்கள். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் விளையக்கூடிய ஐந்து வகையான பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தயாராகும் பஞ்சாமிர்தத்துக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரமான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு பிரசாதத்தில் உபயோகம் செய்யப்படும் நெய்யில் மாட்டின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டெய்ரி நிறுவனத்தின் சார்பில் திருப்பதிக்கு நெய் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. 

இதனிடையே பாஜக தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods ) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிபட்ட ஒரு நல்லவரைதான் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது சனாதன ஒழிப்பு திமுக அரசு.  

ஆந்திராவின் பெருமை திருப்பதி தமிழகத்தின் பெருமை பழனி.ஒரே சமயத்தில் இரண்டு கோவில்களிலும் ஒரே நபர்.கடந்த 2022ம் ஆண்டு திமுக நியமித்த புதிய அறங்காவலர்  பொறுப்பேற்ற பிறகுதான்  பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டு போயுள்ளது, பல முறை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், அறங்காவலர் குழு மழுப்பலாக பதில் சொல்லி வருவது யாரை காப்பாற்ற ?பழனி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சப்ளை செய்யபடும் நெய்யை பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும் என சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து தமிழக அரசின் உண்மையை கண்டறியும் குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில், பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods நிறுவனம்தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது பொய்யான செய்தி.பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழில் 'பஞ்ச' என்றால் ஐந்து என்றும் 'அமிர்தம்' என்பது தெய்வீக அமிர்தத்தைக் குறிக்கிறது.பழனி பஞ்சாமிர்தம் 2016 ஆம் ஆண்டு GI அங்கீகாரத்தைப் பெற்றது. GI பயன்பாட்டின் படி, பஞ்சாமிர்தம் உணவுப் பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன் மற்றும் ஏலக்காய் ஆகியவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக டைமண்ட் சர்க்கரை மற்றும் பேரிட்சை பழம் சேர்க்கப்படுகின்றன. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஃப்டிஆர்ஐ) வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் இந்த புனித பிரசாதத்திற்கு GI அங்கீகாரம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow