சென்னை: இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 339 ரன்கள் குவித்து இருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அரை சதம் (56 ரன்) அடித்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் கேப்டன் ரோகித் சர்மா (6 ரன்), சுப்மன் கில் (0), விராட் கோலி (6 ரன்), கே.எல்.ராகுல் (16 ரன்) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆடமிழக்க இந்திய அணி ஒரு கட்டத்தில் 144/6 என பரிதவித்தது.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திரே ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடி அணியை தலைநிமிர வைத்தனர். ஜடேஜா நிதானமாக விளையாட, தனது சொந்த மண்னில் அஸ்வின் மாஸ் காட்டினார். பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனபோதிலும் நேர்த்தியாக ஷாட்களை விளையாடிய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதம் அடித்து மாஸ் காட்டினார்.
வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 82 ரன்களுடன்னும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் தஸ்கின் அகமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு சிறிது நேரத்தில் சத நாயகன் அஸ்வினும் (133 பந்தில் 113 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். அவர் 11 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசியுள்ளார். தொடர்ந்து ஆகாஷ் தீப் (17 ரன்), ஜஸ்பிரித் பும்ரா (7 ரன்) அடுத்தடுத்து அவுட்டாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்று 2வது நாளில் இந்தியா 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 2 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டாகி வெளியேறினார். ஒருபக்கம் பும்ரா தனது அனுபவத்தால் மிரட்ட, மறுபக்கம் ஆகாஷ் தீப் சிறப்பாக பந்துவீசி ஜாகிர் ஹசன் (3 ரன்), கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (15 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.