Squid Game 2 Teaser: ஆட்டம் இனிதான் ஆரம்பம்... மிரட்டலாக வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்!

பிரபல கொரியன் வெப் சீரிஸ்ஸான ஸ்க்விட் கேம் சீசன் 2 டீசர் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sep 20, 2024 - 17:22
Sep 20, 2024 - 17:49
 0
Squid Game 2 Teaser: ஆட்டம் இனிதான் ஆரம்பம்... மிரட்டலாக வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்!
ஸ்க்விட் கேம் 2 டீசர்

சென்னை: கடந்த 2021ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்திய ரசிகர்களிடம் கொரியன் வெப் சீரிஸ்கள் பிரபலமாக ஸ்க்விட் கேம் தான் காரணமாக அமைந்தது. மொத்தம் 9 எபிசோட்களாக வெளியான இந்த சீரிஸ், ரசிகர்களை மிரள வைத்தது என்றால் அது மிகையாகாது. பணம் தேவைப்படும் எளிய மக்களையும், பணம் மீது பேராசை பிடித்தவர்களையும் ஒரே வீட்டிற்குள் அடைத்து வைத்து மரண விளையாட்டு காட்டியது ஸ்க்விட் கேம்.

முதல் இரண்டு எபிசோட்களை கடந்துவிட்டால், அடுத்த 7 எபிசோட்களிலும் ரசிகர்களே எதிர்பார்க்காத சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறும். அந்தளவிற்கு திரைக்கதை, மேக்கிங் இரண்டும் செம மாஸ்ஸாக இருந்தது. நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் என்ற பெருமையும் ஸ்க்விட் கேம்க்கு உண்டு. அதன்படி, மொத்தம் 94 நாடுகளில் ஒளிபரப்பான ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ்ஸை, 142 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். மிகப் பெரிய பரிசுத் தொகையை வெல்ல வேண்டும் என்றால், போட்டியாளர்கள் சில விளையாட்டுகள் விளையாட வேண்டும். அதில் தோற்பவர்கள் உடனடியாக சுட்டு கொல்லப்படுகிறார்கள். வெற்றிப் பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். 

இறுதியாக ஸ்க்விட் கேம் விளையாட்டில் யார் வெற்றிப் பெற்றார் என்பதைவிடவும், அதனை நடத்தியது யார் என தெரியவரும் போது ரசிகர்களே மிரண்டுவிடுவார்கள். அதேபோல் போட்டியாளர்களுக்கு நடத்தப்படும் விளையாட்டுகளும் சிறுவர்களுக்கானது தான். அதனை செம த்ரில்லாக காட்டியவிதத்தில் ஸ்க்விட் கேம் சீரிஸ் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இந்த சீரிஸின் இரண்டாவது சீசனுக்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் இரண்டாவது சீசன், இன்னும் செம த்ரில்லிங்காக இருக்கும் என்பதை இந்த டீசரில் பார்க்க முடிகிறது. இதில் மேலும் பல மர்மங்கள் விலகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

அதேபோல், ஸ்க்விட் கேம் சீசன் 2-வின் ரிலீஸ் தேதியையும் நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி இந்த சீரிஸ், டிசம்பர் 26ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கொரியன் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. பிரபல மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸுக்குப் பின்னர் இந்திய ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்தது ஸ்க்விட் கேம் தான். தற்போது இதன் 2வது சீசன் வெளியாகவிருப்பது, நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், கேம் ஓவர், மீண்டும் விளையாடளாமா என்ற கேப்ஷனுடன் வெளியான ஸ்க்விட் கேம் சீசன் 2 டீசர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow