Sawan Maha Shivratri 2024 : தீர்க்க சுமங்கலி வரம்.. கணவனின் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம்

Sawan Maha Shivratri 2024 in Tamil : சாவன் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த மாதத்தில் வரும் மகாசிவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

Aug 2, 2024 - 15:17
Aug 3, 2024 - 10:10
 0
Sawan Maha Shivratri 2024 : தீர்க்க சுமங்கலி வரம்.. கணவனின் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம்
Sawan Maha Shivratri 2024 in Tamil

Sawan Maha Shivratri 2024 in Tamil : வட இந்தியாவில் ஆடி மாதத்தை சாவன் என புனிதமாதமாக கடைபிடிக்கின்றனர். இந்த மாதத்தில் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து சிவன் கோவிலில் சிவனுக்கு நேரடியாக அபிஷேகம் செய்கின்றனர். சாவன் மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல்நாள் மகாசிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. கணவன் ஆயுள் அதிகரிக்க வட இந்திய பெண்கள் இந்த விரதம் இருக்கின்றனர்.

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடியில் தொடங்கி மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. 

சாவன்  என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்.அந்த மாதத்தில் திங்கட்கிழமை, பிரதோஷம், மகாசிவராத்திரி நாட்களில் கங்கையிலிருந்து, காவட் மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வட இந்தியர்களின் பழக்கம். இன்று சாவன் மாத மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அலகாபாத், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கோவிலுக்கு வெளியே வரிசையில் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 

இதேபோல், டெல்லியிலும் சாவன் மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி பகுதியில் உள்ள மஹாகாளேஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கங்கை நீரை எடுத்து வந்து நீண்ட வரிசையில் நின்று அபிஷேகம் செய்தனர். 

ஆடி மாதத்தில் அம்பிகை பார்வதி தவமிருந்து சிவனை மணம் முடித்தார். அம்பிகையின் தவத்தை மெச்சி தனது உடலின் ஒருபாகத்தை சக்தி அளித்தார், ஆடி மாதம் அம்மன் மாதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் சிவனை சிறப்பிக்கும் விதமாக சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக இம்மாத சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கணவன் ஆயுள் அதிகரிக்கும் என்பது வட இந்திய பெண்களின் நம்பிக்கை. 

சாவன் மாதத்தில், சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கன்வார் என்றால் நீண்ட கம்பு என்று பொருள்.நீண்ட கம்பின் இருபுறமும் கட்டித்தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பானைகளுடன் காவி உடையணிந்து யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தர்கள், ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை சேமித்து தோள்களில் சுமந்து செல்வர். அவ்வாறு சேமிக்கப்படும் நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்வர். இந்த பயணம் மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவர். 

வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வார் யாத்திரை இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. இன்று மகாசிவாராத்திரி கொண்டாடப்படுகிறது. கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். 

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய சிவ ஆலயங்களில் மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல்நாள் மகாசிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவ ஆலயங்களில் விடிய விடிய அபிஷேகம் நடைபெறும். கண் உறங்காமல் சிவ ஆலயங்களில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow