அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது குவாட் அமைப்பு. இன்று நடக்கும் குவாட் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.

Sep 21, 2024 - 08:18
 0
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!
PM Modi Left For USA

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று (21ம் தேதி) அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, அமெரிக்காவின் வில்மிங்டனில் உள்ள டெலாவேரில் நடக்க உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது குவாட் அமைப்பு. 

இன்று நடக்கும் குவாட் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் 4 நாடுகளுக்கும் இடையிலான வணிக, பொருளாதார உறவுகள், இந்தோ-பசிபிக் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி வரும் 23ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். 

இது தவிர பல்வேறு இரு தரப்பு சந்திப்புகள் மற்றும் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். அத்துடன் மிகப்பெரும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசு பிரதமர் மோடி, நியூயார்க்கில் இந்தியா வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்றுகிறார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த பிரதமர் மோடி, ‘’அமெரிக்காவில் புலம்பெயர்ர்ந்த இந்தியர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் உள்ளேன்’’ என்று தெரிவித்து இருந்தார். 

பிரதமர் மோடி 22ம் தேதி (நாளை) நியூயார்க்கில் புலம்பெயர்ர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்காக நியூயார்க் மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழச்சியில் லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகிறார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, தனது நெருங்கிய நண்பரான டிரம்ப்பை சந்தித்து பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

’’அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்கிறேன். மோடி ஒரு அற்புதமான மனிதர்’’என்று  டொனால்ட் டிரம்ப்பும் கூறியுள்ளார். ஆனால் மோடி-டிரம்ப் சந்திப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow