Vettaiyan: “ரஜினி எளிமையானவர்... தலைவர் ஐடியா அது..” வேட்டையன் விழாவில் அமிதாப், அனிருத் அட்ராசிட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அனிருத், மஞ்சு வாரியர் பேசியது குறித்து இதில் பார்க்கலாம்.

Sep 20, 2024 - 23:06
Sep 20, 2024 - 23:08
 0
Vettaiyan: “ரஜினி எளிமையானவர்... தலைவர் ஐடியா அது..” வேட்டையன் விழாவில் அமிதாப், அனிருத் அட்ராசிட்டி!
வேட்டையன் இசை வெளியீட்டு விழா

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், வேட்டையன் இசை வெளியீட்டு விழாவும் களைகட்டியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தசெ ஞானவேல், மஞ்சு வாரியர், ராணா, அனிருத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேநேரம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உடல்நிலை பாதிப்பு காரணமாக இதில் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் பேசிய வீடியோவை படக்குழுவினர் மேடையில் ஒளிபரப்பினர். 

அதில், “என் ஹெல்த் அட்வைஸ் காரணமாக சென்னை விழாவுக்கு வர முடியவில்லை. ரஜினியும் நானும் இணைந்து பல இந்தி படத்தில் நடித்துள்ளோம். இப்போது தமிழில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளது பெருமையாக உள்ளது. ரஜினி நல்ல நண்பர், நல்ல மனிதர். அவர் ஒரு சூப்ரீம் நடிகர், அதைவிட ரொம்பவே எளிமையானவர். நாங்கள் ஹம் படத்தில் நடித்தபோது அதன் படப்பிடிப்பு மொரிசியசில் நடந்தது. அப்போது நான் காரில் ஏசி போட்டு ஓய்வு எடுத்தேன். ஆனால் ரஜினி அவ்வளவு பெரிய நடிகர், அவர் எந்த பந்தாவும் இல்லாமல் தரையில் படுத்து உறங்கினார்” என பேசினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்தனர்.

முன்னதாக பேசிய மஞ்சு வாரியர், முதலில் ரசிகர்களுக்கு நன்றி கூறினார். அசுரன், துணிவு படங்களில் மட்டுமே நடித்துள்ள எனக்கு இப்படியொரு வரவேற்பு கொடுத்தது ரசிகர்களாகிய நீங்கள் தான் என்றார். முக்கியமாக அசுரன், துணிவு படங்களின் பெயரை மஞ்சு வாரியர் சொன்ன போது ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து பேசிய மஞ்சு வாரியர் இப்போது வேட்டையன் படமும் மூன்றாவதாக ரிலீஸாகிறது. இப்படியான சிறந்த கூட்டணியில் வேலை பார்த்துள்ளது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தசெ ஞானவேலுக்கும் நன்றி. 

மனசிலாயோ பாடலை ரொம்ப சந்தோஷமா ஷூட் பண்ணோம். ஆனால் மக்களுக்கு இந்தளவுக்கு பிடிச்சுருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஜெய் பீம் படத்தை பார்த்த பிறகு தசெ ஞானவேல் இயக்கத்துல கண்டிப்பா நடிக்கனும்னு தீவிரமா இருந்தேன். ஆனால் இந்த வேட்டையன் படத்துல நான் இருப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் பார்க்க முடியுமா என்றெல்லாம் நான் நினைச்சிருக்கேன். இப்போ அவரு கூட நடிச்சிருக்கேன் நம்பவே முடியல. 50 Years of Unmatched Dominance சத்தியமாக சாத்தியமே இல்லாத விஷயம் என ரொம்பவே எமோஷனலாக பேசினார். 

அவரையடுத்து பேசிய அனிருத், முதலில் வேட்டையன் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தில் கமிட்டாகும் போது ஞானவேல் சாருடன் எனக்கு செட்டாகுமா என சந்தேகம் இருந்தது. அவருக்கு எனது வைப் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என யோசித்தேன். ஆனால், என் கெரியரில் வேட்டையன் ரொம்ப முக்கியமான படமாக அமைந்துவிட்டது. இப்படியொரு படத்துக்கு இதுவரை நான் மியூசிக் பண்ணது கிடையாது. இந்தப் படம் பண்ணதில் எனக்கு பெருமை தான், அதிலும் ரஜினி சார் இப்படியொரு கதையில் நடித்தது தான் ரொம்பவே முக்கியமானது. வேட்டையன் படத்தில் இருந்து இயக்குநர் தசெ ஞானவேல் எனக்கு அண்ணனாகிவிட்டார். உங்க மனசுக்காகவே இந்தப் படம் ஹிட்டாகும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஐ லவ் யூ தலைவா” என ரஜினி ரசிகர்களுக்கு வைப் கொடுத்து மாஸ் காட்டினார். மனசிலாயோ பாடலை வேறு ஒருவரை வைத்து பாட வைக்க நினைத்தேன், ஆனால் தலைவர் தான் மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்தலாம் என்றார். எத்தனையோ படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றாலும், வேட்டையனுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வைப் மறக்கவே முடியாது. ரஜினி சார் நடந்து வர்ற ஃபீல் பார்த்து வரும் சந்தோஷத்துக்கு முன்னாடி எந்த விருதும் ஈடாகாது. அதேபோல் அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசி காட்டிய அனிருத், அதுதான் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்றார். வேட்டையன் படத்தின் ஃபைனல் ரிசல்ட் பார்த்துவிட்டு என் கண்களில் கண்ணீர் கசிந்துவிட்டது. இந்த எமோஷனல் எனக்கு எப்போதும் கிடைக்காது என பேசினார்.

அதன்பின்னர் பேசிய இயக்குநர் தசெ ஞானவேல், பணம் போட்ட தயாரிப்பாளர் அதை எடுக்கணும். மக்கள் நம்பி தியேட்டருக்கு வர்றாங்க, அவங்க ஏமாறக் கூடாது. என் ரசிகர்களுக்கு இந்த சீன் பிடிக்குமா..” என படப்பிடிப்பில் ரஜினி சார் அடிக்கடி கேட்பார். இவைகள் தான் ரஜினி சாரின் சக்சஸ் வார்த்தைகள். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இருவரும் செட்டில் நேரம் தவறாமையை அவ்வளவு சின்சியராக கடைபிடித்தனர். அமிதாப் வரும் முன்பே தான் வந்து விடணும் என்று ரஜினி சார் நினைப்பார். தமிழில் ஒரு நல்ல படம் வந்தால் மறக்காமல் பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி சார். ஜெய்பீமை அப்படி பாராட்டி அதன்பின்னர் இந்தப் படம் கொடுத்தார். 

தொடர்ந்து பேசிய இயக்குநர் தசெ ஞானவேல், இந்த மேடையில் நான் சூர்யாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் இப்ப இந்த இடத்தில் நிற்க முக்கியமான காரணமே சூர்யா சார் தான் என்றார். இயக்குநர் தசெ ஞானவேல் சூர்யாவுக்கு நன்றி சொன்னபோதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முன்னதாக வேட்டையனுக்காக சூர்யா தனது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow