சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், மனசிலாயோ பாடலுக்கு அனிருத்துடன் இணைந்து ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் செமையாக என்ஜாய் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூலி படப்பிடிப்புத் தளத்திலும் மனசிலாயோ பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியிருந்தார் ரஜினிகாந்த்.
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் இறுதியாக பேசிய ரஜினிகாந்த், சில படங்கள் தோல்வியடைந்தால் அடுத்தப் படத்துக்கு டென்ஷன் இருக்கும். படம் தோல்வியான பின்னர் அடுத்த ஹிட் கொடுக்காமல் நிம்மதியாக இருக்க முடியாது, மன உளைச்சலா இருக்கும். அதேமாதிரி ஒரு படம் ஹிட்டானால் அதுவும் டென்ஷன் தான். ஒரு படத்தோட வெற்றியை இன்னொரு படம் பிரேக் பண்ணவில்லை என்றாலும் அதுக்கும் டென்ஷன் இருக்கும். படம் ஹிட்டாக ஒரு மேஜிக் இருக்கணும், அப்படியொரு படம் தான் ஜெயிலர். அதனால் ரசிகர்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்றது ரொம்பவே சவாலான விஷயம். இப்பலாம் பெரிய அல்லது ஹீரோ இருந்தால் மட்டும் படம் ஹிட்டாகி விடாது. அதுக்கு காரணம் நாம எந்த இயக்குநர் கூட சேர்ந்து படம் பண்றோம்ங்குறது தான் என்றார்.
மேலும், தயாரிப்பாளர்கள் இருந்தாலும் நல்ல இயக்குநர்கள் கிடைப்பது இப்போது கஷ்டம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் கதை, திரைக்கதை, வசனம் என எல்லாவற்றுக்கும் தனித்தனியாக ஆள் இருப்பாங்க. இப்போ அப்படியில்லை, எல்லாமே ஒருத்தார் தான், அவர் தான் இயக்குநர். ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் கதை கேட்பதை விட்டுவிட்டேன். ஒருவேளை கதை பிடிக்கவில்லை என்றால் அது அந்த இயக்குநர்களுக்கு கஷ்டமாக இருக்கும். ஜெய்பீம் படம் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எந்த இயக்குநர்கிட்டயும் வேலை செய்யாம டெக்னிக்கலா நல்லா படம் பண்ணிருந்தார் ஞானவேல். உண்மையாகவே இயக்குநர் தசெ ஞானவேல் ரொம்ப திறமையானவர்.
அதன்பின்னர் தான் அவரிடம் கதை கேட்டேன், அதேபோல், எனக்கு மெசேஜ் படம் வேண்டாம் கமர்ஷியலா வேணும்னு கேட்டேன். இது முழுக்க முழுக்க பிஸினஸ் தான், அதனால் மெசேஜ்ஜை விட கமர்சியல் தான் முக்கியம் எனக் கூறினேன். உடனே 10 நாட்கள் டைம் கேட்ட ஞானவேல், இரண்டே நாளில் பதில் சொன்னார். நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாம உங்களை வேறொரு லெவலில் காட்டுறேன்னு சொன்னாரு. நானும் அதான் வேணும், இல்லைன்னா நான் திரும்பவும் நெல்சன்கிட்டயே போயிருப்பேன்னு சொன்னேன். ஒருவேளை சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருப்பார். அதேபோல் இயக்குநர் ஞானவேல் என்னிடம் 100% அனிருத் வேணும்னு சொன்னார்; அப்போ நான் எனக்கு 1000% அனிருத் தான் வேணும்னு சொல்லிட்டேன் என மீண்டும் வைப் கொடுத்தார் ரஜினிகாந்த்.
மேலும், வேட்டையன் படத்தில் ஃபஹத் பாசில் நடிப்பை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் கமிட்டான போது எனக்கு அவரைப் பற்றி தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்பில் தான் ஃபஹத் பாசில் நடிப்பை பார்த்தேன். அவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருந்தது. ஃபஹத் பாசில் கால்ஷீட் லோகேஷ் கனகராஜ்ஜிடம் இருந்தது. இதுபற்றி லோகேஷிடம் சொன்னதும், உடனே ஃபஹத் பாசிலை வேட்டையனில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டார் எனக் கூறிய ரஜினி, சைடில் லோகேஷையும் கலாய்த்தார். லோகேஷ் இன்னும் கதையே எழுதவில்லை, அதனால் தான் ஃபஹத் கால்ஷீட்டை வேட்டையனுக்கு கொடுத்துவிட்டதாக பங்கம் செய்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து பேசிய அவர், வேட்டையன் படத்தை அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என பூஜை போடும் போதே முடிவு செய்திருந்தோம். ஆனால், லைகாவின் பைனான்ஸ் பிரச்சினையால் தான் ரிலீஸ் தேதியை அறிவிக்க தாமதமானது.