சென்னை: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 32 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டியது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் அதிகமாக இருந்தது.
தமிழகத்தில் இன்று (20.09.2024) மற்றும் நாளை (21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது. அதாவது மயிலாப்பூர், கோடம்பாக்கம்,நுங்கம்பாக்கம், மந்தைவெளி, திருவான்மியூர், கிண்டி, ஆதம்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ராயப்பேட்டை, மெரினா, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டியது.
சென்னையின் சில இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் 21.09.2024 (இன்று) முதல் 26.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று புறநகர் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் மழை பரவலாக மழை பெய்துள்ளது.