ரூ.5,000 குறைத்த தயாரிப்பாளர்.. ஆட்டோ ஓட்டுநருக்கு வழங்கிய வைரமுத்து.. நெகிழ்ச்சி!

‘நான் ஆட்டோக்காரன்.. நான் ஆட்டோக்காரன்..' பாடல் இன்றும் ஆயுத பூஜை பண்டிகையின் பிரதான பாடலாக ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்படுகிறது. ‘ரா ரா ரா ராமையா..’ பாடலில் ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அழகாக அடுக்கியிருபார் இருப்பார் கவிப்பேரரசு. இது தவிர, ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு..’ என்ற பாடலில் வார்த்தையில் புகுந்து விளையாடி இருப்பார்.

Sep 21, 2024 - 14:47
Sep 21, 2024 - 14:50
 0
ரூ.5,000 குறைத்த தயாரிப்பாளர்.. ஆட்டோ ஓட்டுநருக்கு வழங்கிய வைரமுத்து.. நெகிழ்ச்சி!
Vairamuthu

சென்னை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது ‘பாட்ஷா’ திரைப்படம். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த இந்த படம் மெகா ஹிட் ஆனது. தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 100 நாட்களை கடந்து ஓடியது. பாட்ஷா படத்தின் வெற்றிக்கு ரஜினியின் அதிரடி ஆக்‌ஷன் ஸ்டைலும், சிறப்பான திரைக்கதை அமைப்பும் முக்கிய காரணமாகும். 

இது தவிர படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது தேனிசைத் தென்றல் தேவாவின் இசை. அதுவும் பின்னணி இசை (BGM) படத்தை ரசிகர்கள் கொண்டாட வைத்தது. அத்துடன் பாட்ஷாவின் பெரும் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம். இதில் இடம்பெற்றிருந்த 7 பாடல்களும் சூப்பர் டூப்பட் ஹிட் ஆனது. இந்த படத்தின் அனைத்தையும் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. ‘நான் ஆட்டோக்காரன்.. நான் ஆட்டோக்காரன்..’ என்ற பாடல் இன்றும் ஆயுத பூஜை பண்டிகையின் பிரதான பாடலாக ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்படுகிறது. 

‘ரா ரா ரா ராமையா..’என்ற பாடலில் ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அழகாக அடுக்கியிருப்பார் இருப்பார் கவிப்பேரரசு. இது தவிர, ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு..’ என்ற பாடலில் வார்த்தையில் புகுந்து விளையாடி இருப்பார். இப்படி பாட்ஷாவின் வெற்றிக்கு பங்கு வகித்த வைரமுத்து, அந்த படத்தின்போது நடந்த ஒரு சுவாராஸ்ய சம்பவத்தை இப்போது பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘’பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள். ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்றார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். ‘முழுப்படத்துக்கு 50 ஆயிரம்’ என்றேன். அதிர்ச்சியானவர் நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார். ‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார். ‘இப்போது நான் வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன். 

‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார்.  எல்லாப் பாடலும்  எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5 ஆயிரம் குறைத்துக்கொண்டு 45 ஆயிரம் கொடுத்தார்.  நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன். வெளியானது ‘பாட்ஷா’; வெற்றியும் பெற்றது.  படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது.  ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன். அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று  என்னைக் கண்டு நின்றது.  காரிலிருந்து இறங்கி வந்தவர் 

‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’என்றார். சென்றேன்,  ஆர்.எம்.வீ என் கையில் ஓர் உறை தந்தார் ‘என்ன இது?’ என்றேன். ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார். ‘நன்றி’ என்று பெற்றுக்கொண்டேன்.  தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டேன். அந்தப் பணம் 5 ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக  வழங்கினேன்’’ என்று கூறியுள்ளார். வைரமுத்துவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow