Review : லப்பர் பந்து படம் எப்படி? கடைசி உலகப் போர் பார்க்கலாமா? நந்தன் தேறுமா? ...இதோ சுடச்சுட விமர்சனம்

Tamil Movie Review : கிரிக்கெட் கதை, ரசிக்க வைக்கும் காமெடிகள், காதல், குடும்ப பிரச்னை, ஈகோ, கடைசியில் ஒரு சமூக கருத்தை சொல்லி இந்த ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக லப்பர் பந்தை அடித்து வீசியிருக்கிறார் இயக்குனர். இந்த வாரம் வெளியான படங்களில் லப்பர் பந்துதான் முன்னணியில் இருக்கிறது

Sep 21, 2024 - 17:05
Sep 21, 2024 - 18:10
 0
Review : லப்பர் பந்து படம் எப்படி? கடைசி உலகப் போர் பார்க்கலாமா? நந்தன்  தேறுமா?  ...இதோ சுடச்சுட விமர்சனம்
இந்த வார ரிலீஸ் படங்கள் விமர்சனம்

Tamil Movie Review : இந்த வாரம் லப்பர்பந்து, நந்தன், கோழிப்பண்ணை செல்லத்துரை, கடைசிஉலகப்போர், தோனிமா, சே குவாரா என 6 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், இந்த படத்தின் கதை என்ன? நம்பி போய் பார்க்கலாமா? இல்லை, தவிர்க்கலாமா? இதோ விமர்சனம்.

லப்பர் பந்து..... ரேட்டிங் 3.5./5

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ்கல்யாண், சுவாசிகா, சஞ்சனா, காளிவெங்கட், ஜென்சன் திவாகர் நடித்த படம் லப்பர் பந்து(Lubber Bandhu). தலைப்புக்கு ஏ ற்ப கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் ஒரு அருமையான காதல், மோதலை கடலுார் ஏரியா களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஊர்ப்பக்கம் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் கெத்தாக விளையாடுகிறார் அட்டக்கத்தி தினேஷ். அவர் களம் இறங்கும்போது விஜயகாந்த் பாட்டு போடும் அளவுக்கு பிரபலம். அவருக்கும் எதிர் டீமில் இருக்கும் ஹரீஷ்கல்யாணுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் சஞ்சனா அப்பாதான் அட்டக்கத்தி தினேஷ் என ஹரீஷ்கல்யாணனுக்கு தெரியவர, அட்டக்கத்தி தினேஷ் எகிற, இரண்டுபேரும் ஒரு சில போட்டிகளில் மோத, என்ன நடக்கிறது என்பது கதை

எத்தனையோ கிரிக்கெட் படங்கள் பார்த்தாலும் லப்பர் பந்து தனித்து தெரிகிறது, ரசிக்க முடிகிறது. காரணம், படத்தில் நடித்த நடிகர்கள், அட்டக்கத்தி தினேஷ் கேரக்டர், அவரின் கோபக்கார மனைவியாக வரும் சுவாசிகா, இவர்கள் மகளாக வரும் சஞ்சனா, எதிர் பக்கம் ஹரீஷ்கல்யாண், அவர் குடும்பம், நண்பனாக வரும் பாலசரவணன், கிரிக்கெட் அணி நடத்தும் காளிவெங்கட், குடிகாரனாக வரும் ஜென்சன் உட்பட பலர் படம் முடிந்தபின்னரும் மனதில் நிற்கிறார்கள். அதுதான் படத்தின் வெ ற்றி. கடலுார்,  திட்டக்குடி பின்னணியில் கதை உருவாகி இருப்பது பிரஷ் ஆக இருக்கிறது. ரொம்ப ஜாலியான கதை என்றாலும், அவ்வப்போது வசனங்கள் மூலம் சமூக பிரச்னைகளை சீண்டுகிறார் இயக்குனர். குறிப்பாக, விஜயகாந்த் பாடல், கிரிக்கெட் போட்டியின்போதும் ஏற்படும் சண்டை, மாமனார், மருமகன் ஈகோ பிரச்னை ஆகியவை படத்தை கமர்ஷியலாக ஜெயிக்க வைக்கிறது. ஆரம்பம் முதல் கடைசிவரை, திருப்பங்களுடன் விறுவிறுவென செல்லும் திரைக்கதை, கிளைமாக்ஸ் ஆகியவையும் படத்துக்கு பலம். ஷான்ரோல்டன் இசை, தினேஷ் ஔிப்பதிவும் கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. கிளைமாக்சில் இயக்குனர் சொல்லும் சமூக மாற்றமும் கவனிக்கப்படதக்கது. 

கிரிக்கெட் கதை, ரசிக்க வைக்கும் காமெடிகள், காதல், குடும்ப பிரச்னை, ஈகோ, கடைசியில் ஒரு சமூக கருத்தை சொல்லி இந்த ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக லப்பர் பந்தை அடித்து வீசியிருக்கிறார் இயக்குனர். இந்த வாரம் வெளியான படங்களில் லப்பர் பந்துதான் முன்னணியில் இருக்கிறது. நீங்க கிரிக்கெட் ரசிகரா? ரொம்ப ஜாலியாக ஒரு படத்தை பார்த்த ரசிக்க ஆசைப்படுறீங்களா? வழக்கமான படங்கள் பார்த்து போராடித்துவிட்டதே என்று பீல் பண்ணுறீங்களா? தாராளமாக லப்பர் பந்து பார்க்கலாம், கை தட்டி, விசிலடித்து ரசிக்கலாம்.

கோழிப்பண்ணை செல்லத்துரை .... ரேட்டிங் 2.5/5

சீனுராமசாமி இயக்கத்தில் ஏகன், பிரிகிடா, யோகிபாபு, லியோ சிவகுமார், சத்யா நடித்த படம் கோழிப்பண்ணை செல்லத்துரை(Kozhipannai Chelladurai).  யோகிபாபு நடத்தும் கோழிக்கடையில் கறி வெட்டுபவராக வேலை செய்கிறார் ஹீரோ ஏகன். தனது தங்கை சத்யாவை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். பக்கத்தில் பானை கடை வைத்திருக்கும் பிரிகிடா, ஏகனை காதலிக்கிறார். தங்கை சத்யாவை, லியோ சிவகுமாரை காதலிக்க, என்னென்ன பிரச்னைகள் வந்தன.  இந்த காதல்கள் கை கூடியதா என்பது கிளைமாக்ஸ் .தேனி  மாவட்ட கிராம பின்னணியில் கதை நடக்கிறது. அதேசமயம், ஒரு கட்டத்துக்குபின் கதையும் மெதுவாக நடக்கிறது. ஓட்டம் இல்லாத திரைக்கதை, மெதுவான காட்சி அமைப்புகள் படத்துக்கு பெரிய மைனஸ். ஹீரோ, அவர் தங்கை உட்பட பலர் நடிப்பில் செயற்கைதனம் அதிகம். யோகிபாபு மட்டும் ஓரளவு ரசிக்க வைக்கிறார். ஹீரோயினாக வரும் பிரிகிடா காட்சிகள் ஓகே. மற்றபடி, என்ன சொல்ல வருகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கவில்லை. ஹீரோ அம்மாவாக ஐஸ்வர்யாதத்தா நடித்துள்ளார். அந்த பிளாஷ்பேக் காட்சிகள், அதன் தொடர்ச்சியாக வரும் கிளைமாக்ஸ் என எதிலும் எளிமைத்தனம் இல்லை. பல நேரங்களில் டிவி சீரியல் போல கதை நகர்கிறது. கோழிப்பண்ணை செல்லத்துரை என தலைப்பு இருக்கிறது. ஓரிரு சீன்களில் மட்டுமே கோழிப்பண்ணை வருகிறது. ரகுநந்தன் இசை, மற்ற நடிகர்களின் நடிப்பு என எதிலும் திருப்பதி இல்லை. தென்மேற்குபருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணேகலைமானே, தர்மதுரை, மாமனிதன் படங்களை இயக்கிய சீனுராமசாமிஇயக்கிய படமா இது என்று சந்தேகம் வருகிறது. 

கடைசி உலகப்போர்... ரேட்டிங்  2/5

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, தயாரித்து, இசையமைத்து, பாடல் எழுதி உருவாக்கி படம் கடைசி உலகப்போர்(Kadaisi Ulaga Por). ஹீரோயின் அனகா, முக்கியமான வேடங்களில் நட்டி, நாசர், முனிஸ்காந்த் நடித்துள்ளனர். இந்த கதையை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியொரு கதை.  அதாவது, 3வது உலகப்போர் வருகிறது.அப்போது சீனா தலைமையில் ஒரு அணி சேர்ந்து, அந்த நாடுகள்  இந்தியா மீது படை எடுக்கிறார்கள். சென்னையை டார்கெட் செய்கிறார்கள்.  மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். அதை ஹீரோ ஹிப்ஹாப் ஆதி எப்படி தடுக்கிறார். மக்களை எப்படி விடுவிக்கிறார் என்பது கரு. என்ன தலை சுற்றுகிறதா? படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை இதெல்லாம் நடக்குமா? ஆதிக்கு என்னாச்சு என்ற கேள்வி எழுகிறது. போர், வியூகம், அடிமைத்தனம், ஏவுகணை தாக்குதல் என பல விஷயங்களை சொல்லி, பார்வையாளளர்களை களைப்படைய வைக்கிறார் இயக்குனர் ஆதி. ஹீரோ ஆதி நடிப்பும் சொல்வற்கு இல்லை. பாடல்களும் அப்படியே. இப்படி அதி நவீன கற்பனையை ஆதி தேர்ந்தெடுத்தது ஏன். அதை யாரும் எளிமையாக புரியாமல், ஏதேதோ காண்பித்து  குழப்பி அடித்து சொன்னது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். காமெடி என்ற பெயரில் முனிஸ்காந்த், சாரா பாடாய்படுத்துகிறார்கள். அந்த கால வில்லன்கள், இலங்கை பிரச்னை, சண்டை, கடைசியில் மக்களை காப்பாற்றுவது என செல்லும் இந்த போர்க்கதை, உண்மையிலே போர்  அடிக்க வைக்கிறது. ஹிப்ஹாப் ஆதிக்கும் ஏனிந்த வேலை என்று கேட்க வைக்கிறது

நந்தன்.... ரேட்டிங்  3/5

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜிசக்திவேல், ஸ்ருதிபெரியசாமி நடித்த படம் நந்தன்(Nandhan). வணங்கான்முடி ஊராட்சியில் அப்பாவை தொடர்ந்து, பலமுறை தொடர்ச்சியாக தலைவராக இருக்கிறார் பாலாஜிசக்திவேல். திடீரென அந்த ஊராட்சியை தனித்தொகுதியாக தேர்தல் கமிஷன் அறிவிக்க, தனது வீட்டில் பண்ணை கூலியாக வேலை செய்யும் சசிகுமாரை தலைவராக்கி, தானே தலைவர்போல நடக்கிறார் பாலாஜிசக்திவேல். ஒரு கட்டத்தில் சசிகுமாரை ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி டார்ச்சர் செய்கிறார். சசிகுமார் என்ன செய்தார் என்பது நந்தன் கதை. ஜாதி பிரச்னை, கிராமங்களி்ல் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை பற்றிய கதை. சசிகுமார், பாலாஜிசக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதிபெரியசாமியை வைத்து அழுத்தமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். ஆனால், பல காட்சிகள் சினிமாதனமாக, எதார்த்தமாக இல்லாதது படத்தை பின்னோக்கி இழுக்கிறது. பல காட்சிகள் வலிய திணித்தது போல இருப்பதும், மிகவும் நீளமாக தொடர்வதும் சலிப்பை ஏற்படுத்துகிறது. சசிகுமார் கேரக்டர் கடைசியில் ஏதோ செய்யப்போகிறது என்று நினைத்தால் அதிலும் சுவாரஸ்யமில்லை. பாலாஜிசக்திவேல் நடிப்பு நாடகத்தனம். படம் முடிந்தபின் நாங்கள் எப்படி கஷ்டப்படுகிறோம். எப்படி அவமானப்படுத்தப்படுகிறோம் என்று சில ஊராட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். அது மட்டுமே மனதில் அழுத்தமாக பதிகிறது.

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் காளிவெங்கட், ரோஷிணி பிரகாஷ் நடித்த படம் தோனிமா(Dhonima). வீட்டு வேலை செய்யும் ரோஷிணி தனது மகனின் அறுவை சிகிச்சைக்காக பணம் திரட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். குடிகார கணவர் காளிவெங்கட். இவர்கள் வளர்க்கும் நாய்பெயர் தோனிமா. இவர்களை சுற்றி கதை நடக்கிறது. பெ ரியளவி்ல் மக்களிடம் போய் சேரவில்லை. ஏ.டி.அலெக்ஸ் இயக்கி நடித்த படம் சேகுவாரா(Che Guevara). கல்லுாரியில் நிலவும் சாதி பாகுபாடு, அடித்தட்டு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னையை பேசுகிறது சேகுவரா. கல்லுாரி பேராசிரியராக சத்யராஜ் நடித்துள்ளார். புரட்சிகர கருத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையாக இருந்தாலும் திரைக்கதையில் ஜொலிக்கவில்லை

**

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow