Nandan : சசிகுமார் வெத்தலை போட்ட கதை... நந்தன் குறித்து இரா.சரவணன்
Director Ira Saravanan Interview About Nandan Film : எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் அது அடிமை வாழ்க்கை தான். அதை இவ்வளவு அழுத்தமாக எந்த படத்திலும் பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன். நந்தனில் நிலக்கிழாராக பாலாஜிசக்திவேல், குடி கூலியாக சசிகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரியாக சமுத்திரக்கனி வருகிறார்கள். ஸ்ருதி பெரியசாமி ஹீரோயின். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
Director Ira Saravanan Interview About Nandan Film : கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களுக்குபின் இரா.சரவணன் இயக்கும் படம் நந்தன். ‘‘தலைப்பே பல அர்த்தங்கள் சொல்கிறதே, இது ஜாதி பிரச்னையை பேசுகிற படமா? ஜாதி பின்னணியில் கதை நகர்கிறதா? நீங்களும் ஜாதி படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டீர்களா என்று கேட்டால், ‘நான் பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவன். சமூக பொறுப்பு எனக்கு அதிகம் உண்டு. என்னுடைய முந்தைய படங்களை போல, இதுவும் அழுத்தமான கதை. பண்ணை தொழிலாளி என்று சொல்லப்படுகிற குடிக்கூலி ஒருவரின் வாழ்க்கைதான் இந்த கதை. சசிகுமார் அந்த கேரக்டரில் நடித்துள்ளார்’ என்று பேச ஆரம்பிக்கிறார். அவரிடம் பேசினோம்
உண்மையை சொன்னால் இந்த கதையை சூரிக்காக எழுதினேன். அவருக்கும் எனக்கும் 15 ஆண்டுகால பழக்கம். கத்துக்குட்டி படம் பண்ணுபோதே, ‘‘ நீங்க காமெடியன் அல்ல. நடிப்பு மீது கடல்அளவு காதல் கொண்டு இருக்கீங்க. நீங்க கதைநாயனாக மாறணும். இந்த காமெடியன் ரோல் உங்க பசிக்கும் பத்தாது’’னு சொல்வேன். அவருக்காகவே இந்த கதையை எழுதினேன். ஆனால், விடுதலை படத்துக்குள் சூரி சென்றதால் நந்தனுக்குள் வர முடியவில்லை. அடுத்து, இந்த கதையை சசிசாரிடம் சொன்னபோது கருணாசிடம் போய் சொல்லுங்க, அவரு வாழ்ந்துவிடுவாரு, 100% பொருந்துவார் என்றார். அவருக்கு பத்தாவது நிமிடத்தில் கதை பிடித்துவிட்டது. என் மீதான பிம்பங்களை இந்த கதை உடைக்கும் என்றார். ஆனால், அவரை வைத்து படம் பண்ண சூழ்நிலை செட்டாகலை.
கடைசியில், நானே நந்தனாக மாறிவிடுறேன் என்று சசிகுமார் சொன்னார். அவர் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே பேசுபவர். நிஜத்தில் பல இடங்களில் ஹீரோ. இந்த கேரக்டர் பண்ணினால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்குமேனு யோசித்தேன். அவரோ, நான் பண்ணுறேன் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் பிடிவாதம் ஜெயித்தது. தனது மேக்கப் மேனை வைத்து லுக்கை மாற்றி, அந்த போட்டோக்களை அனுப்பினார். இன்னும் விரிவாக சொல்லப்போனால் இது ஒரு நந்தனை பற்றிய கதையல்ல, பல நந்தன்களை பற்றிய கதை.
சசிகுமார் படப்பிடிப்புதளம் வந்து, முதலில் அங்கே நடப்பதை கவனித்தாரு. படப்பிடிப்பு தொடங்கி 6 நாட்கள் கழித்துதான் அவரை நடிக்க வெச்சோம். முதல் நாளில் அவர் நடித்தபோது அந்த பாடிலாங்குவேஜ் எனக்கு பிடிக்கலை. அன்று எடுத்த சீனை உடனே எடிட் செய்து காண்பித்தேன்.நான் எதிர்பார்ப்பது இந்த உடல் மொழியை அல்ல. நான் பார்த்த வெள்ளந்தி மனிதர்களை நீங்க கொண்டு வரணும்னு சிலரை அழைத்து போய் காண்பித்தேன். சசிசார் சிரித்தார். அவ்வளவுதான், நான் நடிக்கலைனு கிளம்பிவிடுவாருனு நினைத்தேன். ஆனால் மறுநாள் கொஞ்சம் லேட்டாக கேரவனை வைத்து இறங்கினார். அவரை, அந்த உடல்மொழியை பார்த்தவர்கள் கைதட்டி பாராட்டினாங்க. அவரை ஓடி சென்று கட்டிப்பிடித்து பாராட்டினாரு பாலாஜிசக்திவேல். அதன்பின் அவரிடம் கேரக்டர் குறித்த பிரச்னை வரலை.
ஹீரோ படம் முழுக்க வெத்தலைபோட்டு நடிச்சு இருக்கிறார். வெத்தலை கதையை பல மணி நேரம் சொல்லலாம். நந்தன் கே ரக்டருக்காக பல வாரங்கள் வெத்தலை போட்டு, அந்த கறையை உருவாக்கினார். சில சமயம் இரவில் கூட வெத்தலை போட்டு துாங்குவாரு, இவ்வளவு ஏன், டப்பிங் பேசும்போது கூட, அந்த வாய்ஸ்க்காக வெத்தலை போட்டு பேசினார். அப்படியொரு அர்ப்பணிப்பு.முதலில் அவருக்கு வெத்தலை போட பிடிக்கலை. நாங்க வற்புறுத்தினோம். சில சமயம் சுண்ணாம்பு அதிகமாகி அவர் வாய் புண் ஆனது. அப்புறம், நீங்க ஸ்டிலில் பார்க்க அந்த கேரக்டருக்காக ஒரு மணி நேரம் மேக்கப் போட்டு ஆளே மாறினார்.மேக்கப் போட்டால் கேரவனுக்கு போகமாட்டாரு. நிஜத்தில் அவர் கொடைக்கானல் கான்வென்ட்டில் படித்த ஸ்டைலிஷ் ஆளு. அவரை தமிழ்சினிமா வேறு மாதிரி காண்பிக்குது.
தஞ்சை போன்ற ஏரியாக்களில் ஒரு சிலர் நிலக்கிழார்களாக, ஏகப்பட்ட நிலங்களை வைத்து இருப்பவர்களாக சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களிடம் ஏகப்பட்பேர் குடிக்கூலிகளாக வேலை செய்வார்கள். அவர்களின் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது, பெரிதாக எதற்கும் கவலைப்படமாட்டார்கள். காலம் முழுக்க குடி கூலிகளாக இருந்தவர்கள் தங்களுக்கென சொந்த வீடு, சொத்து எதுவும் இல்லாமல் மறைந்துபோனதும் நடந்து இருக்கிறது. என் 20 வயதுவரை நாங்கள் கூட ஒரு தோப்பில் குடும்பத்துடன் குடி கூலியாக இருந்தோம். அவர்களின் நல்லது கெட்டது செலவுகளை அந்த முதலாளி பார்த்துக்கொள்வார். சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற பாதுகாப்பு உணர்வின் அவர்கள் இருப்பார்கள்.
அதேசமயம், முதலாளி சொன்னதை செ ய்யாவிட்டால், அவர்கள் கோபத்தை சம்பாதித்தால் அந்த வாழ்க்கை நரகம். அவர்களுக்கு தேவைப்படாவிட்டால் துாக்கி எறிந்துவிடுவார்கள். நானும் அந்த அவஸ்தைகளை சந்தித்து இருக்கிறேன். எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் அது அடிமை வாழ்க்கை தான். அதை இவ்வளவு அழுத்தமாக எந்த படத்திலும் பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன். நந்தனில் நிலக்கிழாராக பாலாஜிசக்திவேல், குடி கூலியாக சசிகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரியாக சமுத்திரக்கனி வருகிறார்கள். ஸ்ருதி பெரியசாமி ஹீரோயின். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
**
What's Your Reaction?