Rajinikanth Speech at Vettaiyan Audio Launch : த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. வேட்டையனில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘மனசிலாயோ..’பாடலுக்கு அனிருத்துடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஆட்டம் போட்டது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் விழாவின் கடைசியில் உற்சாகமாக பேசிய ரஜினிகாந்த், திரைத்துறை முழுக்க முழுக்க பிஸ்னஸ்தான். ஆகவே எனக்கு மெசேஜ் படம் வேண்டாம்; கமர்ஷியல் படம்தான் வேண்டுமென்று இயக்குநரிடம் கேட்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்த விழாவில் ரஜினி ஒரு குட்டிக்கதையும் சொன்னார். விழாவில் பேசிய ரஜினி, ‘’புவனா கேள்விக்குறி, முள்ளும் மலரும் படத்தில் நடித்த மாதிரி நீங்கள் இப்போது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குநர் ஞானவேல் என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு ஒரு குட்டிக்கதை தான் நினைவுக்கு வந்தது. அதாவது ஒருவர் மிகப்பெரிய பள்ளத்தாக்கில் இறங்கி அங்கு ஓடும் ஆற்றில் துணி துவைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் துவைக்க கூடிய துணியை சுமந்து செல்ல ஒரு கழுதை இருந்தது. ஒருநாள் அந்த கழுதை திடீரென காணாமல் போய்விட்டது.
இதனால் அவர் வீட்டில் இருந்தவர்களை மறந்து விட்டு கழுதையை தேடிச்சென்று கடைசியில் ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டார். பின்பு அவர் மிகப்பெரிய ஞானி என்று அவருக்கு பல சிஷ்யர்களும் வந்து சேர்ந்தனர். அவர் எதையும் பேசமாட்டார். அவர் சைகையில் சொல்வதே நடப்பதாக அனைவரும் நம்பினர். ஊரே அந்த ஞானியை போற்றி புழ்ந்தது. கடைசியில் ஒரு நாள் அந்த ஞானி முன்பு ஒரு கழுதை வந்து நின்றபோது. அதனைப் பார்த்ததும் 'எனது கழுதை. வந்துவிட்டது. எனது கழுதை வந்து விட்டது' என்று கத்தினார்.
அப்போது தான் இவர் ஒரு டோபி என்று.. அந்த சிஷ்யர்களுக்கு விஷயம் தெரிந்தது. உடனே அவர்கள், 'இதைப்பற்றி நீங்கள். ஏதும் பேசாதீர்கள். தற்போது நீங்கள் மிகப்பெரிய ஞானி' என்று அவரை அமைதியாக உட்கார வைத்தார்கள். அதுபோல்தான் நானும், டோபி. முள்ளும் மலரும் படத்தில் நான் நடித்து பேசிய வசனங்கள் எல்லாம் இயக்குநர் மகேந்திரன் பேசிய டயலாக் தான். நான் நடித்த காட்சிகள் தான் வெளியே வந்திருக்கிறது.
ஒரே காட்சிக்கு 15 டேக் எடுத்துள்ளேன். ஒரு டோபி மாதிரி ஏதோ நடந்து போச்சு என்னை நல்ல ஆர்டிஸ்ட் என்று சொன்னார்கள். தளபதி மாதிரி என்னை நடிக்க சொன்னா எப்படி? இதனால், தான் பைரவி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்து என்னுடைய டிராக்கை மாற்றிக்கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா-கழுகு கதை குறித்து ரஜினி பேசியிருந்தார். அவர் விஜய்யை தான் தாக்கி பேசியதாக அப்போது சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.