ரஷித் கான் சுழலில் சிக்கிய தென்னாப்பிரிக்கா.. ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை!
9 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஷார்ஜா: தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகள் 50 ஒவர் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz),ரியாஸ் ஹாசன் (Riaz Hassan) களமிறங்கினார்கள். ரியாஸ் ஹாசன் நிதானமாக ஆட, குர்பாஸ் அதிரடியில் வெளுத்துக் கட்டினார். தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த குர்பாஸ், அதிரடி சதம் (110 பந்தில் 105 ரன்கள்) விளாசி அவுட் ஆனார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.
இதற்கிடையே ரியாஸ் ஹாசன் (29 ரன்), ரஹ்மத் ஷா (50 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த அஸ்மத்துல்லா உமர்சாய் 50 பந்தில் 86 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 300 ரன்கள் கடக்க வைத்தார். அவர் 6 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் விளாசி நாட் அவுட் ஆக திகழ்ந்தார். 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 311 ரன்கள் குவித்த நிலையில், இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் களமிறங்கினார்கள்.
ஒப்பனிங்கில் சிறப்பாக விளையாடி 73 ரன்கள் சேர்த்த கேப்டன் டெம்பா பவுமா (38 ரன்), டோனி டி ஜோர்ஜி (31 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ரஷித் கான் மற்றும் நங்கெயாலியா கரோட்டின் சுழல் வலையில் முழுமையாக சிக்கினார்கள். ரீசா ஹென்ட்ரிக்ஸ் (17 ரன்), எய்டன் மார்க்ரம் (21 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (2), கைல் வெர்ரின்னே(2) என முன்னனி வீரர்கள் களத்துக்கு வருவதும் உடனடியாக விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருந்தனர். 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி வெறும் 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஏற்கெனவே முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்ததால் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரை முதன்முறையாக வென்று ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 9 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றதை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இவ்விரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
What's Your Reaction?