Saripodhaa Sanivaaram OTT Release Date : நானி ஹீரோவாக நடித்த சரிபோதா சனிவாரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் அபிஸியலாக வெளியாகியுள்ளது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் கடந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நானி ஹீரோவாகவும், அவருக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் நானி, இந்த முறை ஆக்ஷன் அவதாரம் எடுத்திருந்தார். நானி – விவேக் ஆத்ரேயா கூட்டணியில் வெளியான அடடே சுந்தரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் சரிபோதா சனிவாரம் படத்தில் இக்கூட்டணி இணைந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டரான எஸ்ஜே சூர்யா, தனது ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சைக்கோத்தனமாக நடந்துகொள்கிறார். காரணமே இல்லாமல் ஏழை, எளிய மக்களை அடி வெளுத்து வாங்கும் எஸ்ஜே சூர்யாவுக்கு, நானி எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பது தான் இப்படத்தின் ஒன்லைன். ஆனால், அதை கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையில் படமாக இயக்கியிருந்தார் விவேக் ஆத்ரேயா. அதாவது, அதிக கோபக்காரரான நானியிடம், அவரது அம்மா உயிரிழக்கும் போது ஒரு சத்தியம் வாங்குகிறார். அந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக 6 நாட்கள் அமைதியாக இருக்கும் நானி, சனிக்கிழமை வந்துவிட்டால் ஆக்ஷனில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்.
இதே ரூட்டில் எஸ்ஜே சூர்யாவுக்கும் தரமான சம்பவம் செய்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் நானி – பிரியங்கா மோகன் இடையேயான காதலும் படம் பார்ப்பவர்களுக்கு வைப் கொடுக்கிறது. ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், எஸ்ஜே சூர்யாவின் மிரட்டலான வில்லத்தனமும், நானியின் ஹீரோயிசமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முக்கியமாக எஸ்ஜே சூர்யாவின் சைக்கோத்தனமான நடிப்பு தெலுங்கு ரசிகர்களை மிரள வைத்தது. மாநாடு, மார்க் ஆண்டனி வரிசையில் எஸ்ஜே சூர்யாவுக்கு சரிபோதா சனிவாரம் படமும் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது.
அதேபோல், ஜேக்ஷன் பிஜோய்யின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. சரிபோதா சனிவாரம், சூர்யாவின் சனிக்கிழமை என்ற டைட்டிலில் தமிழிலும் வெளியாகியிருந்தது. பாக்ஸ் ஆபிஸில் 90 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்த சரிபோதா சனிவாரம், தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அதன்படி இந்தப் படம் வரும் (செப்) 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சரிபோதா சனிவாரம் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே 27ம் தேதி மாரி செல்வராஜ்ஜின் வாழை திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸான வாழை படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். ஒருபக்கம் வாழ்வியலை பேசிய வாழை படமும், இன்னொரு பக்கம் ஆக்ஷன் ஜானர் மூவியான சரிபோதா சனிவாரமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன. இதனால் ஓடிடி ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர்.