VidaaMuyarchi VS Viduthalai 2: கிறிஸ்துமஸ் ரேஸில் விடாமுயற்சி VS விடுதலை 2… அஜித்துடன் மோதும் சூரி!
இந்தாண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக விடாமுயற்சி, விடுதலை 2 படங்கள் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட மகிழ் திருமேனி, அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கவுள்ளார். அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி, ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ரோட் மூவி என சொல்லப்படுகிறது.
இதனால் இந்தப் படத்தில் தரமான கார் சேஷிங் ஆக்ஷன் சீன்ஸ் அதிகம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை அதற்கு முன்பாக ரிலீஸ் செய்துவிட படக்குழு பிளான் செய்து வருகிறது. அதன்படி இந்தப் படம் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம் விடுதலை 2ம் பாகமும் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த விடுதலை முதல் பாகம், கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இப்படத்தில் சில உண்மைச் சம்பவங்கள் சரியாக காட்சிப்படுத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இதனால், ஏற்கனவே விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தும், மீண்டும் இந்தப் படத்தை ரீ-ஷூட் செய்து வருகிறார் வெற்றிமாறன்.
அதேநேரம் விடுதலை 2ம் பாகத்திற்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பின் முடிவில் ஃபுட்டேஜ் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது. இதனையடுத்து இந்தியன் 2 பாணியில் விடுதலை 2, விடுதலை 3 என இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். எனவே விடுதலை 2ம் பாகத்தை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடவும், அதனைத் தொடர்ந்து 2025 மார்ச் மாதம் விடுதலை 3ம் பாகத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, இந்தாண்டு கிறிஸ்துமஸ் ரேஸில் அஜித்தின் விடாமுயற்சியும் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2ம் பாகமும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - இன்று மாலை 6 மணிக்கு கூலி கேரக்டர் அப்டேட்
இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், கிட்டத்தட்ட இது கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது. இதனிடையே அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகவிருந்த சூர்யாவின் கங்குவா, நவம்பர் இறுதியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அக். 10ம் தேதி வெளியாகவிருப்பதால், கங்குவா ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல் விடாமுயற்சி – விடுதலை 2ம் பாகம் இடையே ரிலீஸ் தேதி பஞ்சாயத்து வராமல் இருந்தால் சரி தான் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






