ஆனி தேய்பிறை பிரதோஷம்.. சிவ ஆலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்.. கண் குளிர தரிசித்த பக்தர்கள்

ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவண்ணாமலை, தஞ்சாவூர்,திருநள்ளாறு ஆலயங்களில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Jul 4, 2024 - 13:11
Jul 4, 2024 - 13:33
 0
ஆனி தேய்பிறை பிரதோஷம்.. சிவ ஆலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்.. கண் குளிர தரிசித்த பக்தர்கள்
Pradosham Tiruvannamalai

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். 

புதன்கிழமையான நேற்றைய தினம் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் மாலை நேரத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு நடைபெற்ற ஆராதனைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும்  பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.பிரதோஷமான நேற்றைய தினம் பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


இதே போல காரைக்கால் அடுத்த திருநள்ளாறு  ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத தேய்பிறை  பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை  பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.முன்னதாக மஞ்சள்,பால்,தயிர்,விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஆனி மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி  பகவானை வழிபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow