ஆனி அமாவாசை.. முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்தால் இத்தனை சிறப்புகளா?

ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் வரக்கூடிய ஆனி அமாவாசை சிறப்பு வாய்ந்தது. ஆனி அமாவாசையை முன்னிட்டு இன்றைய தினம் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து ராமநாதசுவாமியை வழிபட்டனர்.

Jul 5, 2024 - 13:59
Jul 5, 2024 - 14:16
 0
ஆனி அமாவாசை.. முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்தால் இத்தனை சிறப்புகளா?
Aani Amavasai in Rameswaram

அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரக்கூடிய நாளாகும். ஆடி, புரட்டாசி,தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசை நாளில் புனித நீர் நிலைகளில் மறைந்த நம்முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது சிறப்பு. இன்றைய தினம் ஆனி அமாவாசை உத்தராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதம். இந்த மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் வரக்கூடிய அமாவாசையில் தர்ப்பணம் சிறப்பு வாய்ந்தது. 

சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம். மிதுன ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்துள்ள நாளில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த திருப்தி ஏற்படுத்தும். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும் என்பது நம்பிக்கை. 

இன்று காலை தொடங்கி நாளை அதிகாலை வரை அமாவாசை திதி உள்ளதால் சர்வ அமாவாசை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று ஆனி மாத அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர்.

இதே போல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கோயில் முன்பகுதியில் உள்ள குண்டத்தில் பக்தர்கள் உப்பு மிளகு தூவி வேண்டுதலை நிறைவேற்றினர். பெண்கள் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடியதால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இருந்து கோவிலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதே போல மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோலத்தில் அருள்பாலித்தார். இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow