பிரிட்டனில் ஆட்சியை பிடித்த தொழிலாளர் கட்சி.. தோல்விக்கு பொறுப்பேற்றார் ரிஷி சுனக்..தொண்டர்களிடம் மன்னிப்பு

இங்கிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தல் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

Jul 5, 2024 - 13:56
 0
பிரிட்டனில் ஆட்சியை பிடித்த தொழிலாளர் கட்சி.. தோல்விக்கு பொறுப்பேற்றார் ரிஷி சுனக்..தொண்டர்களிடம் மன்னிப்பு
UK Election result

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பழமை வாத கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.இந்தத் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிருஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் பழமை வாத கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளைக் கொண்ட பிரிட்டனில் மொத்தம் 650 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 326 தொகுதிகளைப் பெறக்கூடிய கட்சி ஆட்சியை அமைக்கும். இதில் தொடக்கம் முதலே கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. கீர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சி 400 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாத கட்சி 92 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. 

தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனின் ஆட்சியை பிடிக்கிறது.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கீர் ஸ்டார்மர், "மாற்றம் இப்போது தொடங்குகிறது. 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முடிவு கட்டப்பட்டது" என்று கூறினார்.

இந்த நிலையில் பிரிட்டன் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக், சுயபரிசோதனை மற்றும் முடிவுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரிஷி சுனக் வலியுறுத்தினார். “தேர்தல் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் பிரிட்டிஷ் மக்கள் தெரிவித்த குறிப்பிடத்தக்க செய்தியைப் புரிந்துகொள்கிறேன். உள்வாங்கவும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.ரிஷி சுனக்கின் பழமைவாதக் கட்சி தொடர்ந்து 14 ஆண்டுகளாக பிரிட்டனில் ஆளும் கட்சியாக இருக்கிறது. பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் உட்பட பல விவகாரங்கள் அரசாங்கத்துக்கு பாதகமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow