உலகம்

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
PM Modi visited Austria

வியன்னா: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்று இருந்தார். தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு இருந்து நோவோ-ஓகாரியோவோவில் உள்ள ரஷ்ய அதிபரின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடியை, விளாடிமிர் புதின் கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளித்த அதிபர் புதின், மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.

இதன்பிறகு மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, ''எனது 3வது ஆட்சி காலத்தில் 3 மடங்கு அதிவேகமாக பணியாற்றுவேன். இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதே எனது அரசின் இலக்கு'' என்று தெரிவித்தார்.

இதனைத் தொடந்து பிரதமர் மோடியும், அதிபர் புதினும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரஷ்யாவின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் வழங்கி கெளரவித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா-ரஷ்யா உறவு, வர்த்தக ஒப்பந்தங்கள், ராணுவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. மேலும் புதினிடம் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக பிரதமர் மோடி, 'போரில் குழந்தைகள் கொல்லப்படுவது மனவேதனை அளிக்கிறது. போர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது'' என்று கூறினார்.

இதன்பிறகு பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் வியன்னா சென்ற அவருக்கு ஆஸ்திரியா அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெக்மர், மோடியை கட்டித்தழுவி வரவேற்றார். பிரதமர் மோடியுடன் அவர் செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

இன்று இருவரும் இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்று 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட  ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெக்மர், ''பிரதமர் மோடியை ஆஸ்திரியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். நாம் இருவரும் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்'' என்றார்.