ஆடிக்கிருத்திகை முருகனின் அறுபடை வீடுகளில் கோலாகலம்.. வீடு வாங்கும் யோகம் தரும் விரதம்

Aadi Krithigai 2024 : மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

Jul 29, 2024 - 06:32
Jul 29, 2024 - 12:44
 0
ஆடிக்கிருத்திகை முருகனின் அறுபடை வீடுகளில் கோலாகலம்.. வீடு வாங்கும் யோகம் தரும் விரதம்
Aadi krithigai viratham

Aadi Krithigai 2024 : ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்றைய தினம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடாக போற்றப்படும் திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விரதம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தெப்ப உற்சவம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

வேத ஜோதிடத்தில் உள்ள இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1ஆம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4ஆம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது.


வேண்டிய வரம் தரும் கிருத்திகை விரதம்

மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். தை மாதம் வரும் தை கிருத்திகை,  ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.


முருகனுக்கு உகந்த கிருத்திகை விரதம்

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி சிவபெருமான் ஆசிர்வதித்தார். கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள்.

செல்வ வளம் தரும் கிருத்திகை விரதம்

மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை. பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள். ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

ஆறு கார்த்திகை விரதம்

ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.
கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றாராம்.  திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள்.

விரதம் இருப்பது எப்படி?

முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

கார்த்திகையும் காவடியும் 

கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு சேர்ப்பது போல இடுப்பன் என்ற அசுரனுக்கு பெருமை சேர்ப்பது போல பக்தர்கள் காவடி சுமந்து வந்து வழிபடுகின்றனர். பால், பன்னீர், புஷ்பங்கள், தீர்த்தக்காவடி என காவடிகள் பலவகை உண்டு. இந்த காவடியை சுமந்து கொண்டு பாதையாத்திரையாக நடந்து சென்று முருகனை வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்கும் ஒரு புராண கதை உள்ளது. 

மலைகளை காவடியாக சுமந்த இடும்பன்

ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து கொண்டு முருகனையே நினத்துக்கொண்டு பழனிக்கு வந்தான் இடும்பன். சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான் அவனால் அதனை அசைக்கக் கூட முடியவில்லை. சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தம் என்றும் தான் இறங்க மாட்டேன் என்றும் கூறினான்.

வரம் கொடுத்த முருகன்

வந்தது கந்தன் என்று தெரியாமல் இடும்பன் கோபம் கொண்டான். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் இடும்பனை அழித்தார் முருகன். இதைக் கண்ட அகஸ்தியர் இடும்பனின் மனைவியுடன் சென்று முருகப்பெருமானை வேண்ட, இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அதோடு  காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு தனது அருள் நிச்சயம் கிடைக்கும் என்று இடும்பனிடம் கூறினார்.

காவடி சுமக்கும் பக்தர்கள்

முருகனின் அருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு அறுபடை வீடுகளுக்கும் பாதையாத்திரையாக வருகின்றனர். காவடி சுமப்பது தமிழ் நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் கடவுள் முருகனுக்கு கோவில் எழுப்பி காவடிகளை சுமந்தும் அலகு குத்தியும் வழிபடுகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியாவிலும் முருக பக்தர்கள் அதிகம் இருக்கின்றனர். எங்கெல்லாம் முருகன் ஆலயம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆடிக்கிருத்திகை விரதம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

வீடு வாங்கும் யோகம் தரும் முருகன்

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள்,  பிரச்சினைகள்,  நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம். 6 கார்த்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் தருவார் முருகப்பெருமான். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow