ஆஷாட பஞ்சமி.. மாதுளை அலங்காரத்தில் ஜொலித்த அன்னை வாராஹி

நவராத்திரியில் பஞ்சமி திதி நடுநாயகமான தினம். அதனாலேயே அன்னைக்கு பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமமும் உண்டு. அதற்கு பஞ்சமி திதிக்கு உரிய இவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள் கொள்ளலாம். ஆஷாட பஞ்சமி தினமான இன்றைய தினம் தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி அம்மன் மதுளை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Jul 10, 2024 - 18:00
Jul 11, 2024 - 15:56
 0
ஆஷாட பஞ்சமி.. மாதுளை அலங்காரத்தில் ஜொலித்த அன்னை வாராஹி
Varahi amman Thanjavur

ஆஷாட மாதம் என்பது சந்திரமான முறையில் ஆனி மாத அமாவாசையில் தொடங்கி, ஆடி மாத அமாவாசை தினத்தோடு முடிவடையும். ஆனி மாத அமாவாசைக்கு மறு தினம் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த நவராத்திரி விழா நடைபெறும். ஆஷாட நவராத்திரி  ஹிமாச்சலப் பிரதேசத்தில் குஹ்ய நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. விஜயவாடா கனக துர்கா கோயிலில் ஆஷாட நவராத்திரி, ‘ஷாகம்பரி உத்ஸவம் அல்லது ஷாகம்பரி திருவிழா’வாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் வாராஹி   நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி நவராத்திரி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஆஷாட  நவராத்திரிக்கு உரிய தெய்வமாக வாராஹி  அம்மன் கொண்டாடப்படுகிறார். வாராஹி அம்மன் சப்த மாதர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்து கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டு முறைகள் இருக்கும். காரணம், மனித வாழ்க்கைக்கு தேவையானவற்றை அருள்பவர்கள் இவர்கள் என்பது நம்பிக்கை. பொதுவாகவே, ஆனி, ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே, இந்தக் காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹி  அம்மன்.ஆகவேதான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை பெரிய கோயிலில் அன்னைக்கு தனிச்சன்னிதி கொண்டு வழிபட்டான் மன்னன் ராஜராஜன். 

தஞ்சை பெரிய கோயிலில் இப்போதும் ஆஷாட  நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாட்களில் இனிப்பு அலங்காரம், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்பூ  அலங்காரம் என தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். இந்த வழிபாட்டில் அன்னை வராக முகத்தோடு காட்சி தருவாள்.

வாராஹியை வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரு காலங்களிலும் வாராஹியை வழிபட வேண்டும் என்றாலும்,ஆஷாட  நவராத்திரி வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், ‘ஆஷாட பஞ்சமி பூஜன பிரியாயை நமஹ’ என்று ஒரு வரி வரும். பஞ்சமியில் செய்யப்படும் பூஜையை பிரியமுடன் ஏற்பவள் அன்னை வாராஹி என்பது இதன் பொருள்.இன்றைய தினம் ஆஷாட பஞ்சமியை முன்னிட்டு மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார் அன்னை வாராஹி அம்மன். 
ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாராஹி அம்மனை வழிபட்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow