டோல்கேட்டை அகற்றுங்கள்.. வலுக்கும் போராட்டம்.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.

Jul 10, 2024 - 18:50
 0
டோல்கேட்டை அகற்றுங்கள்.. வலுக்கும் போராட்டம்.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
கப்பலூர் சுங்கச்சாவடியில் போராட்டம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரியும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிடக் கூறியும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசின் சுங்கச்சாவடி கடந்த 2011ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சுங்கச் சாவடி, நகராட்சி பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு தொலைவில் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் விதிமுறை மீறி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்தச் சூழலில் கட்டணம் வசூலிப்பதிலும் சுங்கச்சாவடி நிர்வாகம் அடிக்கடி உள்ளூர் மக்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடக்கிறது. இதனிடையே இன்று முதல் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதந்தோறும் ரூ. 340 கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50% கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு அதிமுக சார்பில் ஆதரவு வழங்கப்பட்டது. போராட்டத்திற்கு அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ள 10 கவுண்ட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். தொடர்ந்து ஆர்.பி.உதயகுமாரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், தென்தமிழகத்தில் நுழைவுப் பகுதியான திருமங்கலம் தொகுதி கப்பலூர் டோல்கேட் விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் நான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று கூறினார். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து காலை முதல் தற்போது வரை சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள், செல்ல முடியாமல் கப்பலூர் டோல்கேட் முன்னும் பின்னும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை வரிசையாக லாரிகள் அணிவித்து நிற்கிறது.

இதனால், ராஜபாளையம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், மதுரை வழியாக திண்டுக்கல், திருச்சி, சேலம், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் 8-மணி நேரத்திற்கு மேல் அணிவித்து நிற்பதால் உரிய நேரத்தில் செல்ல முடியாததால் கனரக வாகன ஓட்டிகள் வாகனத்துடன் காத்திருக்கின்றனர்.

8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரக்கூடிய போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், தற்போது போராட்டக் குழுவினருடன் கப்பலூர் சுங்கச்சாவடி மேலாளர் மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow