சித்தர்கள் வாழும் சதுரகிரி மலை.. அமாவாசையில் அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்

Aadi Amavasai : சதுரகிரியில் எழுந்தருளும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Jul 25, 2024 - 10:22
Jul 26, 2024 - 10:02
 0
சித்தர்கள் வாழும் சதுரகிரி மலை.. அமாவாசையில் அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்
Sathuragiri Temple

மதுரை: ஆடி அமாவாசையை(Aadi Amavasai) முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆலயத்திற்கு பக்தர்கள் சென்று வழிபட 5 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் உலாவும் அந்த மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவேதான் அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

மூலிகை வனம் சதுரகிரி:

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். 
மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதாகவும், இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.


அமாவாசை தரிசனம்

இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. எட்டு  ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். 

கண்நோய் சர்க்கரை நோய் தீரும்

 சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை வழிபட்டால் வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணமடையும், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார் அகஸ்தியர். இங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன், கண் நோய், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும் என்கிறார் கோரக்க சித்தர்.

திருமண தடை நீங்கும்

நாக கன்னி தவம் செய்யும் இடம் தற்போது நாக கன்னி காவு என்று இன்றும் அழைக்கப் பெறுகிறது. இங்கு ஆதிசேஷன் மனைவி சிவனை குறித்து தவம் செய்து, இந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனுக்கு பலமும், உற்சாகமும் தருகிறார். இந்த ஸ்தலத்தில் திருமணத் தடையான நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம் போன்றவையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் உபாதையும் விலகும் என்கிறது சித்தர் வாக்கு. ஆடி அமாவாசை தொடங்கி 8 அமாவாசைக்கு சதுரகிரி மலையேறி சுந்தரமகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow