Aadi Amavasai 2024 : ஆடி அமாவாசை.. சுமங்கலிகள் அமாவாசை விரதம் இருக்கலாமா?.. சாஸ்திரம் சொல்வதென்ன?

Aadi Amavasai 2024 : ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

Aug 2, 2024 - 07:29
Aug 3, 2024 - 10:12
 0
Aadi Amavasai 2024 : ஆடி அமாவாசை..  சுமங்கலிகள் அமாவாசை விரதம் இருக்கலாமா?.. சாஸ்திரம் சொல்வதென்ன?
Aadi Amavasai 2024 Tharpanam

Aadi Amavasai 2024 : ஆடி அமாவாசையில் ஆண்கள், அதிலும் தாய் அல்லது தந்தையை அல்லது ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்கள் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால் அவர்களுக்கு எப்படி தர வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆடி அமாவாசை: 

அமாவாசை திதியில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் நாம் நம்முடைய முன்னோர்களுக்கு அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை வரும் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நாளை மாலை 4 மணி முதல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். 

அமாவாசை விரதம்:

ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். சுமங்கலி பெண்கள் எள்ளும் தண்ணீரும் இரைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எள்ளும் தண்ணீரும்:

அமாவாசை நாளில், புனித நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் காலையில் குளித்துவிட்டு, தூய்மையான நீரையும் கொஞ்சம் கருப்பு எள்ளையும் எடுத்துக் கொண்டு, வீட்டில் கால்படாத இடத்தில், காசி விஸ்வநாதரையும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியையும் நினைத்துக் கொண்டு, மறைந்த தாய் தந்தையர், தாத்தா பாட்டியையும் அவர்களின் முன்னோரையும் நினைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்காகவும் மூன்று முறை எள்ளும் தண்ணீருமாக விடவேண்டும்.

இறந்த சுமங்கலிகளுக்கு தர்ப்பணம்:

இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவரவருக்கு இயன்ற வகையில் சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி வழிபட்டு முன்னோர்களின் ஆசி பெறலாம்.

அமாவாசை விரதம்:

கணவர் இருப்பவர்கள், அதாவது சுமங்கலிகள் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.  தாய் தந்தை இல்லாத பெண்கள், அதேசமயம் கணவரை இழந்த பெண்கள், அமாவாசை நாளில் விரதம் இருக்கலாம். எனக்கு தாய் தந்தை இல்லை. ஆனால் அண்ணன் தம்பி உண்டு என்று கூறும் பெண்கள், அவர்களுக்கு கணவர் இருக்கும் பட்சத்தில் விரதம் மேற்கொள்ளக்கூடாது.

அன்னதானம் கொடுக்கலாம்: 

எனக்கு அப்பா அம்மா இல்லை. ஆனால் கணவர் இருக்கிறார்' என்று சொல்லும் பெண்கள், விரதம் இருக்கக் கூடாது. அதேபோல், எனக்கு சகோதரர்கள் இல்லை. அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டார்கள்' என்று சொல்பவர்கள், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று ஏதேனும் தானம் கொடுக்கலாம். நான்குபேருக்கு அன்னதானம் செய்யலாம். அமாவாசையில் கோயிலுக்கு சென்று  தீபம் ஏற்றி வழிபடலாம். முடிந்தவரை யாருக்காவது அன்னதானம் செய்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow