ஆடிக் கிருத்திகை: காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.. முருகன் ஆலயங்களில் அரோகரா முழக்கம்

Aadi Krithigai 2024 : ஆடிக் கிருத்திகை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காலை முதலே சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காவடிகளுடன் பக்தர்கள் திருத்தணிக்கு வந்துக் கொண்டிருப்பதால், நகரில் காவடிகள் ஓசை களைகட்டியது.

Jul 29, 2024 - 09:58
Jul 29, 2024 - 13:14
 0
ஆடிக் கிருத்திகை: காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.. முருகன் ஆலயங்களில் அரோகரா முழக்கம்
aadi krithigai murugan temple

Aadi Krithigai 2024 : ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் ஆடி கிருத்திகையான இன்று முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆடிக் கிருத்திகையில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும் என்றும் குழந்தை வரம், திருமணம், பதவி உயர்வு, உள்ளிட்டவைகளுக்கு வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் ஐதீகமாகும்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் சனிக்கிழமை துவங்கியது. நேற்று ஆடிபரணியை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று  தங்க கவசம், வைரக்கல் முத்து. மரகத மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் உற்சவருக்கு சிறப்பு  மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடி கிருத்திகை திருவிழாவையோட்டி ஐந்து நாட்கள் திருக்கோவில் இரவு நேரங்களிலும் திறந்து இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காவடிகளுடன் பக்தர்கள் திருத்தணிக்கு வந்துக் கொண்டிருப்பதால், நகரில் காவடிகள் ஓசை களைகட்டியது. ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், அதிக அளவில் பக்தர்கள் திருத்தணி மலையில் குவிந்து வருகின்றன். 

 நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் மொட்டையடித்து சரவணபொய்கை, நல்லாங்குளம் ஆகிய திருக்குளங்களில் நீராடி  கோயில் படிகள் மற்றும் மலைப் பாதை வழியாக மலைக்கோயில் வந்தடைனர். பின்னர் பலமணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு காவடிகள் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகரில் பேருந்துகள், லாரிகள். ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலும் பக்தர்கள் கூட்டம்  அதிகரிக்கும் என்று எதிர்பார்பால் காவடிகளுடன் திருத்தணிகை விழாக்கோலம் பூண்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள எட்டாம் படை வீடு திருவல்லிக்கேணி திருமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் ஆடி கிருத்திகையையொட்டி எட்டாம்படை வீடு திருவல்லிகேணி திருமுருகன் திருக்கோவிலில் அன்னதானமும் மாலை 5 மணிக்கு திருமுருகனுக்கு விசேஷ அலங்காரத்தில் ஆராதனை செய்யப்பட உள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு இறை இசை நிகழ்வும்  இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற  உள்ளது.

ஆடி கிருத்திகையையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் திருவல்லிகேணி திருமுருகன் கோயிலுக்கு வரவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையிலும் பக்தர்கள் வசதிக்காக கோயில் வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டது. வெயில் நேரங்களில் பொதுமக்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக கோயிலுக்கு வெளியே சிவப்பு கம்பளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையையொட்டி எட்டாம் படை வீடு திருவல்லிக்கேணி திருமுருகன் திருக்கோவிலில் நடைபெற்ற மகா அபிஷேகம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow