ஓமனில் தலைகீழாக கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 8 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

எண்ணெய் கப்பல் மூழ்கிய பகுதியில் பயங்கரமான கடல் கொந்தளிப்பும், கடுமையான காற்றும் வீசியதால் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் இந்திய மற்றும் ஓமன் கடற்படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Jul 18, 2024 - 10:39
Jul 19, 2024 - 10:07
 0
ஓமனில் தலைகீழாக கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 8 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!
8 indian rescued

மஸ்கத்: ஓமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடனில் ஏராளமான எண்ணெய் வயல்கள் உள்ளன. இந்த நகரை நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது. கொமரோஸ் கொடி பொருத்தப்பட்டுள்ள 'ரெஸ்டிஜ் பால்கன்' என்ற பெயர் கொண்ட அந்த எண்ணெய் கப்பலில் இலங்கை, இந்தியாவை சேர்ந்த 16 பேர் இருந்துள்ளனர். 

துறைமுக நகரமான ஏடன் நோக்கி சென்ற இந்த கப்பல் ஓமனின் முக்கியமான தொழில்துறை நகரமான துக்ம் அருகே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் இருந்த கேப்டன் உள்பட அனைவரது தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 

இந்த தகவலை உறுதிப்படுத்திய ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம், ''ஏடன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் நடுக்கடலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. கப்பலில் இருந்தவர்களின் நிலை என்ன? கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்துள்ளதா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை'' என்று தெரிவித்து இருந்தது.

எண்ணெய் கப்பல் கடலில் மூழ்கியது குறித்து தகவல் அறிந்த ஓமன் கடல்சார் பாதுகாப்புத் துறை கப்பலில் இருந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சம் ஓமன் நாட்டின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தது. 

இதேபோல் இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக், எண்ணெய் கப்பல் மூழ்கிய இடத்துக்கு சென்று கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்திய கடற்படையை சேர்ந்த P8I எனப்படும் உளவுசார் போர் விமானமும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 

எண்ணெய் கப்பல் மூழ்கிய பகுதியில் பயங்கரமான கடல் கொந்தளிப்பும், கடுமையான காற்றும் வீசியதால் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் இந்திய மற்றும் ஓமன் கடற்படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடைவிடாமல் தேடுதல் வேட்டை நடத்தியதன் பலனாக கடலில் மூழ்கிய 8 இந்தியர்கள் உள்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர். அதே வேளையில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மாயமாகியுள்ள 6 பேரை தேடும் பணி கடும் சவாலுக்கு மத்தியில் தீவிரமாக நடந்து வருகிறது. 

விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் 117 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பல் கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்டது. கப்பல் விபத்துக்குள்ளான துறைமுக நகரமான துக்ம்மில் அதிக அளவினான எண்ணெய் வயல்கள் உள்ளன. அங்கு பல்வேறு எரிவாயு சுரங்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow