Kamala Harris : 'அடுத்த கேள்வி கேளுங்கள் ப்ளீஸ்'.. டிரம்ப்பின் இனவெறி பேச்சுக்கு கமலா ஹாரிஸ் பதில்!
Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.

Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார்.
அத்துடன் அவர் புதிய அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சி நிர்வாகிகள் விருப்பப்படி 59 வயதான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4ம் தேதி முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
அதற்கு முன்னதாக இருவரும் தீவிரமாக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு முதன்முறையாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அனைத்து அத்தியாசிய பொருட்களின் விலையை குறைக்கவும், மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்'' என்று உறுதி அளித்தார்.
அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்றார். அப்போதே பைடன் எனக்கு ஆதரவு அளிப்பதில் தெளிவாக இருந்தார்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''ஜோ பைடன் மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறங்கியபோது அவரது வயது மற்றும் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது எதையும் நான் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் மீண்டும் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டபோது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவரின் ஆட்சியில் துணை அதிபராக பணியாற்றியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம். அமெரிக்க அதிபருக்கு உரிய அறிவுத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் மனப்பான்மை ஜோ பைடனுக்கு உள்ளது. ஆனால் டிரம்புக்கு இது எதுவும் இல்லை'' என்று கூறினார்.
''இதற்கு முன்பு இந்தியர் என கூறிய கமலா ஹாரிஸ், இப்போது தான் ஒரு கறுப்பர் என கூறி அனுதாபம் தேடுகிறார்'' என்று டொனால்ட் டிரம்ப் இனவெறியை தூண்டுவதுபோல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். டிரம்ப்பின் இந்த பேச்சு குறித்து கமலா ஹாரிஸிடம் கேட்டபோது, ''இதெல்லாம் ரொம்ப பழசு, அடுத்த கேள்வி கேளுங்கள் ப்ளீஸ்'' என்று தெரிவித்தார்.
அதன்பின்பு டிரம்பை கடுமையாக குற்றம்சாட்டிய கமலா ஹாரிஸ், ''அமெரிக்கா மற்றும் அமெரிக்க மக்களின் தன்மையையும் வலிமையையும் குறைக்கும் செயலை நோக்கி டிரம்ப் செல்கிறார். உண்மையில் நமது தேசத்தை பிரிக்கிறார். ஆனால் அமெரிக்க மக்கள் டிரம்புக்கு எதிராக திரும்பி ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க உள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றால் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும்'' என்றார்.
What's Your Reaction?






