மியான்மர் நிலநடுக்கம்- தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாகவும், 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 29-ஆம் தேதி காலை 11:50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கத்தினால் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு அப்போது தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கிய நிலையில் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல், ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமான நிலையில் தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
மியான்மர் இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நிலநடுக்கத்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்பதால் பிற நாடுகள் எங்களுக்கு உதவ முன்வரலாம்” என்று தெரிவித்திருந்தார்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
இதைத்தொடர்ந்து, கடந்த 29-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது. மேலும், 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அண்டை நாடுகள் உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உணவு, போர்வைகள், மருந்து, ஜெனரேட்டர்கள் என 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பிய நிலையில் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது.
What's Your Reaction?






