அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்... வெற்றி யாருக்கு?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்று அவர்கள் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் நேரலையில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்படும் மரபாகும்.
அதன்படி நேற்று முன்தினம் ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா நகரில் ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதல் விவாதம் நடந்தது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் இருவரும் அனல்பறக்க பேசினார்கள். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பணவீக்கம் மற்றும் நிதி விவகாரம், கருக்கலைப்பு சட்டம், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்கள் விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள்.
தன்னுடைய ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்த்தாக டிரம்ப் கூறிய நிலையில், ஜோ பைடன் அதை திட்டவட்டமாக மறுத்தார். இதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர், கொரானா காலக்கட்டங்களிலும் அமெரிக்காவின் நிலை குறித்தும் இருவரும் சூடுபறக்க பேசினார்கள். ஒரு கட்டத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, பைடன் தயங்கித் தயங்கித் பேசியதை பார்க்க முடிந்தது. இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது இந்த விவாதம் குறித்து மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதில் விவாதத்தை பார்த்த சுமார் 67% மக்கள் டொனால்ட் டிரம்ப்க்கு வெற்றி கிடைத்துள்ளது என கூறியதாக சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் 33% மக்கள் ஜோ பைடனுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். இதேபோல் மக்களின் கருத்துப்படி முதல் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப்க்குதான் வெற்றி கிடைத்துள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் விவாதத்தில் டிரம்ப் முன்னிலையில் இருப்பது ஜோ பைடன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?