1,778 அறைகள், 5 நீச்சல் குளங்கள்.. பிரதமர் மோடி செல்லும் உலகின் மிகப்பெரிய அரண்மனை!
இந்த அரண்மனை முழுவதும் 38 வகையான மார்பிள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதை விட பார்த்து, பார்த்து செதுக்கப்பட்டது என்றே கூறலாம். அரண்மனையின் உட்புற பகுதிகளின் சில இடங்கள் 22 கேரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.

பந்தர் செரி பெகவான்: பிரதமர் நரேந்திர மோடி தென் கிழக்கு ஆசிய நாடான புருனேவுக்கு சென்றுள்ளார். அந்த நாட்டின் சுல்தான் ஹாஜி ஹஸ்னல் போல்கியாவை சந்திக்கும் பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார். புருனேவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி புருனே நாட்டின் 'இஸ்தானா நூருல் ஈமான்' அரண்மனையில் சுல்தான் ஹாஜி ஹஸ்னல் போல்கியாவை சந்தித்து பேசுகிறார். 'நம்பிக்கை ஒளி அரண்மனை' என அழைக்கப்படும் இந்த அரண்மனை சுல்தான் ஹாஜி ஹஸ்னல் போல்கியாவின் அதிகாரப்பூர்வ அரசு இல்லமாக செயல்பட்டு வருகிறது.
புருனே தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள இந்த அரண்மனை, உலகின் மிகப்பெரிய அரண்மனை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அளவுக்கு இந்த அரண்மனையில் அப்படி என்ன உள்ளது? என்பது குறித்து பார்ப்போம். 1981ம் ஆண்டு சுல்தான் ஹசனல் போல்கியா இந்த பிரம்மாண்ட அரண்மனையின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
சுமார் 3 ஆண்டுகள் நடந்த கட்டுமான பணிகள் 1984ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த அரண்மனையின் கட்டுமானச் செலவு 1.4 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் கட்டிடக்கலைஞர் லியோனார்டோ லோக்சின் தான் இந்த அரண்மனையை வடிவமைத்துள்ளார். சுமார் 2,00,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் அரண்மனையில் மொத்தம் 1,778 அறைகள் உள்ளன. 257 குளியலறைகள் உள்ளன.
அரண்மனையின் விருந்தளிக்கும் இடத்தில் ஒரே நேரத்தில் 5,000 பேர் அமர முடியும். ஒரே நேரத்தில் 110 கார்களை பார்க்கிங் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 200 போலோ குதிரைகளை நிறுத்தி வைக்கும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட கொட்டகை உள்ளது. 5 நீச்சல் குளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 1,500 பேர் தொழுகை செய்யும் மசூதியும் உள்ளது. அரண்மனை முழுவதும் 44 மாடிப்படிகள் உள்ளன.
இந்த அரண்மனை முழுவதும் 38 வகையான மார்பிள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதை விட பார்த்து, பார்த்து செதுக்கப்பட்டது என்றே கூறலாம். அரண்மனையின் உட்புற பகுதிகளின் சில இடங்கள் 22 கேரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன. புருனே இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மலாய் மரபுகள் கலந்த வடிவில் இஸ்தானா நூருல் ஈமான் அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.
28வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இந்த அரண்மனையில் நடந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க அரண்மனையில் கால் வைக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
What's Your Reaction?






