கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? நம்பக்கூடாதா? கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் தேடாத ஆள் இருக்கவே முடியாது. கடவுள் பக்திக்கும் அறிவியலுக்கும் நடுவே ஆண்டாண்டு காலமாக ஒரு போர் நடைபெற்று வருகிறது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த கேள்வி தற்போது பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகம் வரை சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் ஒரு பிரபல பள்ளி இயங்கி வருகிறது. அண்மையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு நன்கு ஆராய்ச்சி செய்து பதிலளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த கேள்விகள்தான் சமூக வலைதளங்களில் ஒரு ரவுண்டு அடித்து வருகிறது.
வீட்டுப்பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள்:
1. உலகம் உருவானது எப்படி?
2. அதனை உருவாக்கியது யார்?
3. எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?
4. ஒழுக்கம் என்றால் என்ன?
5. மதம் என்றால் என்ன?
6. கிறிஸ்துவம் என்றால் என்ன?
7. கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன?
8. கடவுள் இருப்பது உண்மையா?
9. சாத்தான் இருப்பது உண்மையா?
10. நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக் கொண்டனரா?
ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
மேலும் படிக்க: ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு மாணவியின் தாயார் இதனை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “ஒக்லஹாமாவில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடம். உலக வரலாற்று வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சி தாள் என சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் இது அபத்தமானது” என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இதனை நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்து வருகின்றனர். “குழந்தைகள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பிரிவினைவாதம், ஒடுக்குமுறை, ஜாதி, மதம் உள்ளிட்டவற்றை குறித்து சரியான புரிதலை அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படியான கேள்விகளை குழந்தைகளிடம் கேட்பது மிகவும் வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.