ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வருகிறது.

Aug 28, 2024 - 08:16
Aug 29, 2024 - 10:29
 0
ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார்

சென்னையில் ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் வரும் 31  மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படவுள்ளது. தற்போது இதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்திற்காக சாலையில் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மன்றோ சிலை சாலையில் பந்தயத்தைக் காண வரும் பார்வையாளர்கள் சொகுசாக அமர்ந்து இதை கண்டுகளிக்கும் விதமாக மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கார் பந்தயத்தை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “இதுபோன்ற கார் பந்தயங்களை உலகளவில் அதற்கான சர்வதேச கூட்டமைப்பு தான் நடத்தும். அதுவும் அதிவேக கார் பந்தயங்கள் பொதுமக்களின் புழக்கத்தில் உள்ள பொது சாலைகளில் நடத்தப்படாது. கார் பந்தயங்களின் போது நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அந்த கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இந்த கார் பந்தயத்தில் பற்கேற்கும் வீரர்கள், சாலைகள், அதற்கான தகுதிகளையும் பந்தயத்துக்கான விதிமுறைகளையும், அதற்கான சிறப்பு உரிமங்களையும் இந்த கூட்டமைப்பு தான் நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஃபார்முலா -4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை தனியார் நிறுவனம் நடத்தவுள்ளது. ஏற்கெனவே புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த கார் பந்தயம் வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தற்போது சென்னையில் பொது போக்குவரத்து மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த பந்தயம் 3.7 கிமீ தூரத்துக்கு தீவுத்திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க: புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கு எதிரானது.. மத்திய அரசை சாடிய அப்பாவு

இதனால் அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள சாலையில் இந்த கார் பந்தயத்தை நடத்துவது என்பது மோட்டார் வாகன விதிகளுக்கும் முரணானது. அனைத்து வசதிகளும் நிறைந்த இருங்காட்டுக்கோட்டையில் இந்த கார் பந்தயத்தை நடத்தினால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, சென்னையில் இந்த கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று (ஆகஸ்ட் 27) கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow