வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்.. யார் இவர்? முழு விவரம்!

83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Aug 7, 2024 - 08:25
Aug 7, 2024 - 08:31
 0
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்.. யார் இவர்? முழு விவரம்!
Mohammad Younus

டாக்கா: வங்கதேச நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். திறமையின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. 

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். 

வன்முறை பெரிதாக வெடித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். போராட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை சூறையாடி கையில் கிடைத்த பொருட்களை அள்ளிச் சென்றனர். வங்கதேசத்தில் அரசு அலுவலகங்கள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீ  வைத்து வருகின்றனர். இதேபோல் இந்து கோயில்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு அதிபர் முகமது சஹாபுதீன் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். ஷேக் ஹசீனா ராஜினாமா பிறகு வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி அறிவித்தார். ஆனால் இதை மாணவர்கள் அமைப்பு ஏற்கவில்லை. அவர்கள் நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்று ராணுவ தளபதியிடம் வலியுறுத்தினார்கள். 

இதனைத் தொடர்ந்து நள்ளிரவில், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக  முகமது யூனுசை நியமித்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். 83 வயதான முகமது யூனுஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை  நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த வங்கி ஏழை, எளிய மக்களுக்கு கடன் உதவி அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதால் முகமது யூனுஸ் மக்களிடம் செல்வாக்கு பெற்றார். பிரதமரின் ஷேக் ஹசினா அரசின் கொள்கையை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடியாக, முகமது யூனுஸ், தனது வங்கியின் மூலம் மக்களிடம் மோசமான முறையில் பணம் வசூலிப்பதாக கூறி அவரை வங்கியின் நிர்வாக பொறுப்பில் இருந்து ஷேக் ஹசினா அரசு அகற்றியது. 

ஏழை, எளிய மக்களை பொருளாதராரீதியாக முன்னேறச் செய்ததாலும், ஷேக் ஹசினா அரசின் கொள்கையை கடுமையாக எதிர்த்ததாலும் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பு விரும்பியது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow