Nepal Landslides : இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இங்கு அடிக்கடி இயற்கை பேரழிவுகள் நிகழ்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் சிக்கி இதுவரை 192 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 3000க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கனமழை வெளுத்து வாங்கியதில் அந்நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான கட்டடங்களும், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழையால், 195 வீடுகள் மற்றும் எட்டு பாலங்கள் இடிந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. தொடர் கனமழையால் பல ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் காத்மாண்டு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்களில் சென்று வெள்ள நீர் சூழ்ந்த வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர்.
நேபாளத்தில் பள்ளி, கல்லூரி கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை!
இந்நிலையில், “கனமழை காரணமாக நேபாளாம் ஒரு சோதனை காலத்தை சந்தித்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் நேபாள ராணுவம், காவல்துறை, துணை ராணுவம் ஆகியவை அயராது உழைத்து வருகின்றன. நிலமை மோசமாக இருப்பதால் மக்கள் யாரும் அவசியம் இன்றி பயணிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இரவு நேரங்களில் மக்கள் அனைவரும் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” என நேபாள அரசு தெரிவித்துள்ளது.