சொந்த கட்சியினரே ஜோ பைடனுக்கு எதிர்ப்பு... அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் மனைவி போட்டி?

முதல் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, ஜோ பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு, அதிபர் பைடன் பதிலடி கொடுக்காதது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Jun 30, 2024 - 14:48
Jul 1, 2024 - 16:21
 0
சொந்த கட்சியினரே ஜோ பைடனுக்கு எதிர்ப்பு... அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் மனைவி போட்டி?
மிட்ச்செல் ஒபாமா

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்செல் ஒபாமா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் 
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். 

அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்று அவர்கள் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகள் குறித்து நேரலையில் எடுத்துச் சொல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 27ம் தேதி ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா நகரில் ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதல் விவாதம் நடந்தது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பணவீக்கம் மற்றும் நிதி விவகாரம், கருக்கலைப்பு சட்டம், புலம்பெயர்ந்தவர்கள் விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர், கொரானா காலக்கட்டங்களில் அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் இருவரும் அனல்பறக்க பேசினார்கள். இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு, அதிபர் பைடன் பதிலடி கொடுக்காதது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாயின. இந்த விவாதம் குறித்து சிஎன்என் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 67% பேர் டொனால்ட் டிரம்ப்க்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், 33% பேர் ஜோ பைடனுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இதேபோல் நியூயார்க் டைம்ஸ் நிறுவனமும் மக்களின் கருத்துப்படி முதல் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப்க்குதான் வெற்றி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது. இதனால் ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் பலர் கூறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்செல் ஒபாமா ஜோ பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக மிட்ச்செல் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ், ''ஜோ பைடன் முதல் விவாதத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டதால் நாடு முழுவதும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியிலும், பயத்திலும் உள்ளனர்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜோ பைடனை நீக்கிவிட்டு மிட்ச்செல் ஒபாமாவை போட்டியிடச் செய்ய வேண்டும் என்பது 80% ஜனநாயக கட்சியினரின் விருப்பமாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow