எங்கள் நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை... உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!
''பாகிஸ்தான் அரசியலைமைப்பு சிறுபான்மையினர்களுக்கான உரிமையை அளிக்கிறது. சிறுபான்மையினர்களின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்''
கராச்சி: இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு தங்கள் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சமீபகாலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்லாமியத்தை அவமதிக்கப்பதாக கூறி சிறுபான்மையினர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்வாட் மாவட்டத்தில் சிறுபான்மையினரான உள்ளுர் சுற்றுலாவாசி ஒருவர் புனித குரானை அவமதித்ததாக கூறி மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கும்பல் அவரது உடலை தெருத் தெருவாக இழுத்துச் சென்று பொதுவெளியில் தொங்க விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. தற்போது அங்கு சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சிறுபான்மையினர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவது உண்மைதான் என்று அந்நாட்டின் ராணுவத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''மதத்தின் பெயரை கூறிக்கொண்டு சில கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருவதால் பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்பட சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் கவலை தெரிவித்தேன். இஸ்லாமியர்கள் எனும் வேடம் அணிந்துள்ள போலி மதவெறி கும்பல்கள் சிறுபான்மையினர்களை தினம்தோறும் கொன்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக நான் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை தடுத்து எனது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு உலகளவில் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அரசியலைமைப்பு சிறுபான்மையினர்களுக்கான உரிமையை அளிக்கிறது. சிறுபான்மையினர்களின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்'' என்று கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?