3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sep 3, 2024 - 17:38
Sep 4, 2024 - 10:05
 0
3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்
நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை பலி

சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சுகுமாரன் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர். தொழிலதிபர் மனோஜ் என்பவரிடம் பணியாற்றி வருகிறார். அதனால் வீட்டு வளாகத்தில் சுகுமாரன் மனைவி, இவர்களது 2 குழந்தைகளுடன் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சுகுமாரனின் 2வது குழந்தையான 3 வயதுடைய ரித்தீஷ் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கியது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என தாயார் தேடிப் பார்த்துள்ளார்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீச்சல் குளத்தில் பார்த்த போது, குழந்தை ரித்தீஷ் உயிருக்கு போராடியபடி தத்தளித்தது. உடனே தாயார் அக்கம்பக்கத்தினர் உதவியோடு அருகில் இருந்த சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாததால், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. மேலும் ஈசிஆரில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அல்லது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அவசரமாக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் நேரம் கடந்து குழந்தை சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக குழந்தை ரித்தீஷ் உயிரிழந்தது.

இதனால் அவரது தாயார் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. ஈஞ்சம்பாக்கத்தில் ஏற்கனவே இருந்த அவசர சிகிச்சை மையத்தை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றிய நிலையில், அவசர சிகிச்சை மையம் இல்லாததால் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த நிலை ஏற்பட்டது.

மாநகராட்சி மருத்துவமனைக்கு குழந்தைக்கு கொண்டு சென்றபோது உயிர் இருந்ததாகவும், ஆனால் போதிய வசதிகள் அங்கு இல்லாததாலேயே மேல் சிகிச்சை அளிக்க முடியாததால் குழந்தை இறப்பிற்கு காரணம் என்கிறார் குழந்தையின் தாய்.

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கிழக்கு கடற்கரை சாலையில் சாலை விபத்துக்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக கிழக்கு கடற்கரை சாலையில், எந்த அரசு மருத்துவமனையும் இல்லை என்பதே கொடுமையிலும் கொடுமை. 

ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் விபத்துக்கள் நடைபெறுவதால், எந்த ஒரு மருத்துவ சிகிச்சைகளுக்கும் சென்னையை நோக்கி ராயப்பேட்டை, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குதான் வர வேண்டும். உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை ஒன்றை கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

நீச்சல் குளத்தில் குழந்தை இறந்தது தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த முதல் தகவல் அறிக்கையில், ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய கொண்டு செல்லும்போது தான், குழந்தை இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போன குழந்தை கையில் கொடுங்கள் என ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய் கதறி அழுதது மனதை உருகியது. 

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய சட்டமன்ற தொகுதியாக உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி. பல்வேறு தனியார் ஐடி நிறுவனங்கள் அந்த பகுதியில் வர வைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்தாலும்  மக்களின் உயிரை காக்க ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை என்பதே வேதனை என்கின்றனர் இறந்து போன குழந்தையின் உறவினர்கள்.

- செய்தியாளர் சுப்பிரமணியன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow