Free Electricity: இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.. என்ன காரணம்?
ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் வாரிய விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்மைத் துறை கள ஆய்வு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாய நிலங்களில் கிணறுகளில் இருந்து நீர் இறைக்கும் மின் மோட்டரை பயன்படுத்துவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சிலர் இந்த இலவச மின்சாரத்தை விவசாயம் அல்லாத வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டிற்காக 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் சுமார் 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் இலவச மின் இணைப்பு மேற்கொள்ளும் மின்சாரத் துறைக்கு வழங்குவதற்காக 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண்மைத் துறை பட்ஜெட்டில் ரூ.7,280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30,000 ரூபாயை மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது. அதே வேளையில் மின்சாரத் துறை வழங்கி வரும் இலவச மின்சாரத்தை சில இடங்களில் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் வாரிய விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்மைத் துறை கள ஆய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு யூனிட் ஒன்றுக்கு 4.60 காசில் இருந்து, 4.80 காசுகளாக உயர்த்தப்பட்டது. 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 காசு பெறப்பட்டு வந்த நிலையில் 6.45 காசாக உயர்த்தப்பட்டது. இதேபோல் 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8.15 காசில் இருந்து 8.55 காசாக உயர்த்தப்பட்டது.
அதே வேளையில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து இருந்தது. மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






