தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாதா? - திருமாவளவனின் கருத்தால் எழுந்த சூடான விவாதம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.

Aug 17, 2024 - 21:11
Aug 17, 2024 - 21:24
 0
தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாதா? - திருமாவளவனின் கருத்தால் எழுந்த சூடான விவாதம்
திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் மற்றும் மருத்துவர் ராமதாஸ்

பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, பட்டியலின சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாக கூறியும், பட்டியல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த செவ்வாய் [13-08-2024] அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மாயாவதி, உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக வந்தது என்பது விதிவிலக்கு. எந்த சூழலிலும் ஒரு தலித், மாநில முதலமைச்சராக வர முடியாது. எந்த சூழலிலும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் நிலை இங்கே இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

திருமாவளவனின் இந்த கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் உள்ளிட்டோட் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அதே சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், ”தமிழ்நாட்டில் பட்டியலின சமூதாயம் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தால், பட்டியலின சமுதாயத்தை முதலமைச்சராக ஆக்குவோம். பட்டியலின சமுதாயத்தினை சார்ந்தவர்கள் 1998ஆம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பாமகதான் என்றும் திமுக 1999இல் தான் பட்டியலின சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்கள்” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகவே முடியாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக, அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை, அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களிடமிருந்தே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் என்றால் அது வன்னியர்கள் தான். தனிப்பெரும் சமுதாயத் தொகுப்பு என்றால் அது பட்டியலினம் தான். இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல். இந்த இரு சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது.

தமிழ்நாட்டில் இரு பெரும் பூர்வகுடிமக்கள் வன்னியர்களும், பட்டியலினத்தவரும் தான். அவர்களை ஒதுக்கி விட்டு அமைக்கப்படும் எந்த ஆட்சியும் தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு தான் 1989ஆம் ஆண்டில் பாமக உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர்கள், அனைத்து நிலை சிறுபான்மையினர் ஆகியோரின் நலனுக்காகவே பாமக தொடங்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக்கப்படுவார் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தேன். பா.ம.கவின் இரண்டாவது மத்திய அமைச்சர் பதவியும் இன்னொரு தலித்துக்குத் தான் வழங்கப்பட்டது.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்ற முழக்கத்துடன் பெரியவர் இளையபெருமாள், பி.வி.கரியமால், சக்திதாசன், டாக்டர். சேப்பன், வை.பாலசுந்தரம், பூவை மூர்த்தி, திருமாவளவன் உள்ளிட்ட பட்டியலினத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டேன். ஆனால், அந்த முயற்சி சாத்தியமாகவில்லை. அதற்கு காரணம் மக்கள் அல்ல.... ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து அனுபவித்து வந்தவர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சி தான். அதை இந்த இரு சமூகங்களும் புரிந்து கொள்ளாததன் விளைவு தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவரோ, வன்னியர் இனத்தவரோ இன்று வரை முதலமைச்சராக முடியாதது.

எனவே தான் சொல்கிறேன், பட்டியலினத்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது சாத்தியமற்றது அல்ல. நம்மால் முடியாது. நம்மால் முடியாது என்று சதிவலையில் மயங்கி கிடப்பதை விடுத்து, நம்மால் முடியும் என்று பட்டியலினத்தவர் நினைத்த வேண்டும். நாம் வீழ்ந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்; நாம் எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அந்த மாற்றம் நிகழும் நாள் தான் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow