சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை – தப்பியோடிய ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை
கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய ரவுடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பாலவாக்கம் சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று இரவு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை பாரதியார் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது தேனாம்பேட்டை ரவுடி மணிகண்டன் என்ற வாண்டு மணி மற்றும் அவருடன் வந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியால் கழுத்து மற்றும் தலை பகுதியில் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரவுடி மணி என்ற வாண்டு மணி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரவுடி மணி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞரை ரவுடி கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






